ராஜபாளையத்தில் மந்தகதியில் நடக்கும் ரயில்வே மேம்பாலப் பணி: வாகன ஓட்டிகள் அவதி

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் உள்ள பி.ஏ.சிஆர் சாலையில் ஓராண்டுக்கு முன்பு ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. ரயில்வே கேட்டின் இருபுறமும் பாலத்திற்கான தூண்கள் அமைத்து, கிழக்குப் பகுதியில் தூண்களுக்கு மேல் சாலைகளும் அமைத்து பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், பாலத்தின் இருபுறமும் சாலை அமைப்பதற்காக, அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வியாபார நிறுவன உரிமையாளர்களிடம் பேசி, இடங்களை தேர்வு செய்தனர். ஆனால், இந்த இடங்களை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், பிஏசிஆர் சாலையில் பள்ளி மற்றும் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன.

இந்த சாலையில் ரயில்வே மேம்பாலப் பணி அரைகுறையாக கிடப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்த சாலை வழியாக செல்லும் குடிநீர் குழாய்கள், தொலை தொடர்பு கேபிள்கள் அடிக்கடி சேதமடைகின்றன. சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். மேலும், பாலத்திற்காக அமைக்கப்பட்ட தூண்கள் மீது கனரக வாகனங்கள் சில நேரம் மோதி விபத்தில் சிக்குகின்றன. இதனால், தூண்களின் உறுதித்தன்மை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, தமிழக அரசு ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: