கோடையை மிஞ்சிய வெயில்: திற்பரப்பில் ஆனந்த குளியல்

குலசேகரம்: குமரியில் கடந்த 2 மாதமாக கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. இதன் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் வேகமாக வற்றி வருகிறது. மலைகளில் உள்ள நீருற்றுகளும் வறண்டு போய்விட்டன. ஆகவே காட்டு விலங்குகள் தண்ணீருக்காக நீர்நிலைகளை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. கடும் வெயில் காரணமாக மரங்களில் உள்ள இலைகள் உதிர்ந்து, காடுகள் அவ்வப்போது பற்றி எரியும் நிலை ஏற்படுகிறது. நாளுக்கு நாள் வெயில் தாக்கம் அதிகரிப்பதால் பொது மக்கள் அருவி, கடற்கரை பகுதிகளுக்கு குடும்பமாக படையெடுக்க தொடங்கிவிட்டனர்.

வற்றாத கோதையாறு திற்பரப்பில் அருவியாக விழுவதால் ஆண்டின் எல்லா மாதங்களிலும் தண்ணீர் கொட்டுவது வழக்கம். தற்போது வெயில் வெளுத்து வாங்குவதால் கோதையாற்றிலும் தண்ணீர் வருகை வெகுவாக குறைந்து உள்ளது.இதனால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. ஆனால் மக்கள் கூட்டத்துக்கு பஞ்சம் இல்லை. கூட்டம் கூட்டமாக வந்து ஆனந்த குளியல் போடுகின்றனர். அருவியின் அருகே உள்ள நீச்சல் குளத்திலும் பெரியவர், சிறியவர் என்று பாராமல் குளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விடுமுறை நாளான இன்று காலையிலும் திற்பரப்பு அருவியில் கூட்டத்தை காண முடிந்தது.

Related Stories: