சன் பவுண்டேஷன் நிதி உதவியால் புத்துயிர் பெற்ற புதுத்தாங்கல் ஏரி

சென்னை அருகே வறண்டுபோன ஏரி, சன் பவுண்டேஷன் நிதி உதவியுடன் தூர் வாரப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. அதன் ஒருபகுதியாக, சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள புதுத்தாங்கல் ஏரியைத் தூர்வாரவும் ஆழப்படுத்தவும் சன் பவுண்டேஷன் கடந்த செப்டம்பர் மாதம் 40 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தது. கேர் எர்த் மற்றும் மெட்ராஸ் ரோட்டரி கிளப் மூலம் 50 ஏக்கர் பரப்பிலான இந்த ஏரியைச் சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் சன் பவுண்டேஷன் சார்பில் காவேரி கலாநிதி மாறன் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த ஜெயஸ்ரீ, அனுராதா கணேசன்,

விஜயபாரதி, ரங்கராஜன், பி.என்.மோகன், நடிகர் மோகன் ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஏரியின் மூலம் அப்பகுதியில் உள்ள 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகப் பயனடைவார்கள் என்று கேர் எர்த் மற்றும் மெட்ராஸ் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் தெரிவித்தனர். நலிவடைந்த மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்கில் தொடங்கப்பட்ட சன் பவுண்டேஷன் மூலம் ஏழை எளியோருக்கு கல்வி, தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. இணைந்து இதுவரை ₹96 கோடிக்கும் அதிகமாக நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: