நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகளில் 1:15 விகிதத்தில் ஆசிரியர்கள் இருக்க வேண்டும் : ஏஐசிடிஇ உத்தரவு

சென்னை: நிகர்நிலைப்பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகளில் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தை பராமரிக்க ஏஐசிடிஇ உத்தரவிட்டுளளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் இன்ஜினியரிங் (ஏஐசிடிஇ) தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான விதிகளை வகுத்து அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான விதிமுறைகள் கையேட்டை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 2018ம் ஆண்டு இன்ஜினியரிங் கல்லூரி ஆசிரியர்கள் எண்ணிக்கையை 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று இருந்ததை 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று மாற்றியது.

இதனால் தமிழகத்தில் மட்டும் 20 ஆயிரம் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி இல்லாத நிலை ஏற்பட்டது. பல கல்லூரிகளில் கூடுதல் எண்ணிக்கையில் இருந்த ஆசிரியர்களுக்கு வேறு பணிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை 1:15 விகிதத்தில் பராமரிக்குமாறு கையேட்டில் கூறப்பட்டுள்ளது. இதன்படி ஆசிரியர் எண்ணிக்கையை வரும் கல்வியாண்டு முதல் பராமரிக்க வேண்டும். ஆனால் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் தரம் வெவ்வேறானது, அவற்றுக்கு தனித்தனியே விதிகள் வகுக்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: