நேர்முக தேர்வு வரை சென்று வந்தவர்கள் ஏமாற்றம் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் 2ம் முறையாக ரத்து செய்யப்பட்ட தேர்வுகள்

*அதிகாரிகளின் தொடர் குளறுபடிகளால் அரசு துறைகளில் அவலம்

நாகர்கோவில்: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பணியிடங்களை நிரப்ப 2 வது முறையாக நடத்தப்பட்ட எழுத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது தேர்வர்களை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 17, 30 மற்றும் டிசம்பர் 1 தேதிகளில் தமிழகம் முழுவதும் தேர்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 18, 20 தேதிகளில் சென்னையில் நேர்முகத்தேர்வும் நடத்தி முடிக்கப்பட்டது. நேர்முக தேர்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்தநிலையில் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் நிர்வாக காரணங்களுக்காக தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் தேர்வு நடக்கும் தேதி பின்னர் வெளியிடப்படும் என்று தமிழக அரசால் திடீரென்று அறிவிக்கப்பட்டது. இது தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இந்த தேர்வு இவ்வாறு ரத்து செய்யப்படுவது இது இரண்டாவது முறை ஆகும்.

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் சார்பில் 17.10.2018 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டு அதற்கான எழுத்து தேர்வு முதலில் மதுரையில் நடைபெற்றுள்ளது. பின்னர் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. மீண்டும் 17.11.2019 அன்று கணினி இயக்குபவர் எழுத்து தேர்வு நடைபெற்றுள்ளது. பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வு அம்பத்தூரில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் 18.1.2020ல் நடத்தப்பட்டது. இந்தநிலையில் கடைசி நேரத்தில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இரண்டு முறை தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தேர்வர் ஒருவர் கூறுகையில், ‘கணினி இயக்குபவர் தேர்வுக்கு நல்ல முறையில் பயிற்சி பெற்று வேலைகிடைக்கும் என்ற முழு நம்பிக்கையோடு சென்றிருந்தேன். தேர்வில் வெற்றிபெற்று நேர்முக தேர்வு வரை சென்று வெற்றிபெற்றேன். எனக்கு பணிஆணை வழங்குவதாக கூறி அனுப்பி வைத்திருந்தனர். ஆனால் அந்ததேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. நான் மிகுந்த ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். என்னுடன் பிறந்த இரண்டு தங்கைகள் உள்ளனர். எனக்கு தெரிந்து இதுவரை இதுபோன்ற எந்த ஒரு தேர்விலும் ஒரு முடிவை தமிழக அரசு எடுத்ததில்லை. நேர்முக தேர்வில் ஏதேனும் முறைகேடு நடந்ததா என்று தெரியவில்லை. அதிகாரிகளின் குளறுபடி என்னை போன்ற ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்களை கடுமையாக பாதித்துள்ளது.

அரசு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் எனக்கு திருமண ஏற்பாடுகளையும் வீட்டில் செய்து வந்தனர். நம்பிக்கையோடு இருந்த நிலையில் இப்போது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருமணமும் தடைபட்டுள்ளது. எனவே அரசு ரத்து செய்யப்பட்டுள்ள அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். தமிழகத்தில் குரூப்-4 தேர்வு, குரூப்-2 ஏ தேர்வு, விஏஓ தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றது நாளுக்கு நாள் அம்பலமாகி வருகின்றது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தால் நடத்தப்பட்ட இந்த தேர்விலும் பெருமளவில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புகள் இருக்கலாம். அதன் காரணமாகவே தேர்வு கடைசி நேரத்தில் ரத்து செய்ய காரணமாக அமைந்திருக்கலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது. எனவே இது தொடர்பாகவும் சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: