மத்திய பட்ஜெட்டில் 22,000 கோடி ஒதுக்கீடு எதிரொலி இனி ‘பிரீபெய்டு மீட்டர்’ பணி சுறுசுறுப்படையும்?

சென்னை: எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளுக்கு மத்திய பட்ஜெட்டில் 22,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ‘பிரீபெய்டு மீட்டர் பொருத்தும் பணி சுறுசுறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 2.90 கோடிக்கும் மேலான மின்இணைப்புகள் உள்ளன. இதில், வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் கீழ் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரம் இலவசமாகும். இதற்காக வாரியத்திற்கும் ஏற்படும் செலவு தொகையை, அரசு வழங்கி வருகிறது. வீடு சார்ந்த மின் இணைபுகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படும். 20 தினங்களுக்குள், நுகர்வோர் கட்டணத்தை செலுத்த வேண்டும். தொழிற்சாலை சார்ந்த இணைப்புகளுக்கு மாதந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டும்.  அவ்வாறு செலுத்தாவிட்டால் அபராதத்துடன் கட்டணம் செலுத்த நேரிடும். இதனால் பெரும்பாலானோர் குறித்த காலத்தில், உரிய மின் கட்டணத்தை செலுத்தி விடுகின்றனர். ஆனால் அரசு துறை அலுவலகங்கள், நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள் போன்றவை, மின் கட்டணம் செலுத்துவதில், அலட்சியம் காட்டுகின்றன.

இதை்தடுக்கும் வகையில், சம்மந்தப்பட்ட இடங்களில் பிரீபெய்டு மீட்டர்களை பொருத்த முடிவு செய்யப்பட்டது. இந்த மீட்டரில், குறிப்பிட்ட அளவு மின்சாரம் மட்டுமே பயன்படுத்தும் வகையில், மென்பொருள் இணைக்கப்படும். அந்த அளவை தாண்டியதும், மின்சாரம் தானாகவே துண்டிக்கப்படும். மீண்டும் மின்சாரம் வேண்டும் என்றால், கட்டணம் செலுத்த வேண்டும். இதற்காக பிரத்தியேகமாக தனிக்குழு அமைக்கப்பட்டது. முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்ட நிலையில், பிறகு தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கு நிகழ் நிதியாண்டில் 22,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட், பிரீபெய்டு மீட்டர்கள் பொருத்தப்பட்டால் மக்களுக்கு இன்னும் சிறப்பான சேவையை வழங்க முடியும்’ எனப்பேசினார். இதன்மூலம் தமிழகத்தில் தொய்வு நிலையில் உள்ள பிரீபெய்டு மீட்டர் பொருத்தும் பணி சுறுசுறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் முறையாக கட்டணம் செலுத்தாமல் அலட்சியம் காட்டிவருவோர் மின்துண்டிப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும்.

Related Stories: