தலைநகரில் ஆட்சியமைக்க போவது யார்?: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு...மாலை 5.30 மணி நிலவரப்படி 52.95% வாக்குகள் பதிவு

புதுடெல்லி: டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8ம்  தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் 11ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என கடந்த மாதம் 6ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி தனித்து நின்று  அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பாஜக 67 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 66 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சியான லாலுவின் ராஷ்ட்ரிய  ஜனதா தளம் கட்சி 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் தனித்தனியாக போட்டியிடுகிறது. மும்முனைப் போட்டியில் ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிக்க பாஜவும் கடுமையாக போராடி வருகின்றன. தேர்தல்  அறிவிக்கப்பட்டதும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டனர். பாஜ சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள்,  45 எம்.பி.க்கள் என்று ஒரு பெரிய படையை களம் இறக்கி பாஜக  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது. காங்கிரசுக்கு ஆதரவாக ராகுல் காந்தி, பிரியங்கா, கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். ஆம் ஆத்மி சார்பில் கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் மற்றும் மூத்த தலைவர்கள் மாநிலம்  முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிந்தத நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கிய முதல்  வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த தேர்தலில் மொத்தம் 1.4 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 80.56 லட்சம் பேர் ஆண்கள். 66.36 லட்சம் பேர் பெண்கள். 815 திருநங்கைகள் வாக்களிக்க  உள்ளனர். 2.08 லட்சம் வாக்காளர்கள் 18-19 வயதுடையோர்.

 

2.05 லட்சம் பேர் 80 வயதை கடந்தவர்கள் ஆவர். முதல்முறையாக 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தபால் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 3000 மாற்றுத்தினாளிகள் மட்டுமே தபால் வாக்குக்களை  பதிவு செய்துள்ளனர். காலை முதல் விறு விறு என தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 5.30 மணி நிலவரப்படி டெல்லி சட்டமன்ற தேர்தலில் 52.95% வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வருகிற  11-ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு டெல்லியில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்று தெரியவரும்.

தேர்தல் கருத்து கணிப்பு:

தேர்தல் தொடர்பாக பல்வேறு செய்தி தொலைக்காட்சிகள் வெளியிட்ட கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி 50 முதல் 60 இடங்களை பிடித்து ஆட்சியை தக்க வைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜகவிற்கு இரட்டை இலக்க இடங்களும்,  காங்கிரசுக்கு ஒற்றை இலக்க இடங்களும் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: