ஐ.டி. ரெய்டுக்கு பிறகு மீண்டும் துவங்கிய நடிகர் விஜய் படப்பிடிப்பை தடுக்க பாஜகவினர் முயற்சி

* சுரங்கத்தை முற்றுகையிட்டதால் நெய்வேலியில் பரபரப்பு

* எதிர்த்து ரசிகர்கள், வி.சி. கட்சியினர் போராட்டம்

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி 2வது சுரங்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 10க்கும் மேற்பட்ட பாஜகவினர் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விஜய்க்கு ஆதரவாகவும் விஜய் ரசிகர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெய்வேலி என்எல்சி 2-வது சுரங்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெய்வேலி என்எல்சி 2ம் சுரங்கத்தில் நடிகர் விஜய் படப்பிடிப்பில் இருந்தபோது வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் சம்மன் அளித்தனர்.  அப்போது பைனான் சியர் அன்புசெழியன் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்தில் நடந்த வருமான வரித்துறையினர் சோதனை சம்பந்தமாக உங்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி சென்னைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்குபின் நேற்று என்எல்சி 2வது சுரங்கத்தில் நடைபெறும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த 10க்கும் மேற்பட்ட பாஜகவினர் 2ம் சுரங்கத்தின் முன்பு திடீரென திரண்டு சுரங்க நுழைவுவாயிலை முற்றுகையிட்டு நடிகர் விஜய் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரிடம், பாதுகாக்கப்பட்ட இடமான என்எல்சி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த என்எல்சி நிர்வாகம் எப்படி அனுமதியளித்தது என்று கேள்வியை எழுப்பியும், தொடர்ந்து இங்கு படப்பிடிப்பை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் 200க்கும் மேற்பட்டோரும் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களும் அங்கு திரண்டு விஜய்க்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், மந்தாரக்குப்பம் போலீசாரும் அவர்கள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். படப்பிடிப்பு முடிந்து நடிகர் விஜய் தனது காரில் வெளியே வந்தபோது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். உடனடியாக மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், மந்தாரக்குப்பம் போலீசாரும் தடியடி நடத்தி அவர்களை விரட்டினர். பின்னர் விஜய்யின் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

Related Stories: