சென்னையில் துப்பாக்கி, கத்தியுடன் மோதிக்கொண்ட மாணவர்கள் கைது: மறைமலைநகர் போலீசார் நடவடிக்கை

சென்னை:  சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூர் அருகே எஸ்.ஆர்.எம் பல்கலை மாணவர்கள் துப்பாக்கி, பட்டா கத்தியுடன் பயங்காரமாக மோதிக்கொண்டனர். இதில், மூன்று பேர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த காட்டாங்கொளத்தூரில்  எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் உள்ளது. இந்த வளாகத்தில் பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, சட்டக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில்  தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. பின்பு, கைகலப்பாக மாறி கல்லூரி வளாகத்திலேயே ஒருவரை ஒருவர் பட்டா கத்தியால் தாக்கிக் கொண்டனர். அதில், ஒரு வாலிபர் கையில் துப்பாக்கியுடன் மற்ற மாணவர்களை நோக்கி சுடுவதற்கு துரத்திச் சென்றுள்ளார். இதைப் பார்த்ததும் அங்குள்ள சக மாணவர்கள், மாணவிகள் அலறியடித்து சத்தம் போட்டு  தலைதெறிக்க ஓடினர். இந்த சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த மாணவர்கள் சிலரை பட்டா கத்தியால்  வெட்டியதில்  மூவருக்கு தலையில்  பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் மறைமலைநகர் போலீசார், சம்பவ இடத்துக்கு வந்தனர். வண்டலூர் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் கல்லூரிக்குள் சென்று மோதல் ஏற்பட்ட இடங்களை ஆய்வு செய்தனர். பட்டாகத்தி மற்றும் ஆயுதங்களை கைப்பற்றினர். அங்குள்ள முக்கிய பகுதிகளில் உள்ள  கேட்டுகளை மூடி  மாணவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் பட்டப்பகலில் மாணவர்களிடையே பட்டா கத்தி, துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டது சக மாணவர்கள் இடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

கல்லூரியில் கூலிப்படை தலைவர்களின் தலையீடு உள்ளதா? காதல் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டதா? மாணவர்களிடையே ரூட் தல உருவாவதற்கு ஏற்பட்ட மோதலா? அல்லது முன்விரோதம் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணவர் கலவரத்தில் துப்பாக்கியுடன் மோதலில் ஈடுபட்டவர்களுக்கு  எப்படி துப்பாக்கி வந்தது. கள்ளத்துப்பாக்கியா? தீவிரவாதிகளுடன் தொடர்பா? பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், மறைமலைநகர் நகர அதிமுக பிரமுகர் மகன்தான் கையில் துப்பாக்கியை வைத்து மோதலில் ஈடுபட்டார் என்பதும், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அதிமுக பிரமுகரின் பேரன்  இந்த மோதலில் கத்தியுடன் அடிதடியில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து  போலீசார் கல்லூரிகளுக்கு சென்று தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும்,  இந்த வீடியோ காட்சியில் பதிவான மாணவர்களை தேடி வருகின்றனர். தற்போது, மோதலில் ஈடுபட்டவர்கள் கிடைத்த நிலையில், 10 பேரை போலீசார் கைதுசெய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதுசெய்யப்பட்ட மாணவர்களிடமிருந்த 4 பட்டாகத்திகள் மற்றும் துப்பாக்கியையும் மறைமலைநகர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: