திருவில்லிபுத்தூர் அருகே பறவைகளின் பாசப்போராட்டம் கிணற்றில் தவறி விழுந்தது ஆண் மயில் உயிர் பிழைக்க உதவியது பெண் மயில்

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் அருகே ஜோடியாக பறந்து வந்தபோது ஆண் மயில் கிணற்றில் தவறி விழுந்ததால், பெண் மயில் பரிதவித்து கிணற்றை சுற்றி வந்து ‘பாசப் போராட்டம்’ நடத்தியது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கண்மாய்கள் மற்றும் குளங்கள் உள்ளன. கண்மாய்களைச் சுற்றி ஏராளமான மரங்கள் உள்ளன. அதில் மயில்கள் உட்பட ஏராளமான பறவைகள் வசித்து வருகின்றன. நேற்று ஒரு ஆண், பெண் மயில் ஜோடி மொட்டபத்தான் பகுதியில் பறந்து வந்தன. திடீரென ஆண் மயில் 70 அடி கிணற்றில் தவறி விழுந்தது.

இதைத்தொடர்ந்து உடன் பறந்து வந்த பெண் மயில் கிணற்றின் கைப்பிடி சுவற்றில் அமர்ந்து கொண்டு சத்தம் எழுப்பியது. மயிலின் சத்தத்தை கேட்டவர்கள் கிணற்றை நோக்கி வந்தனர். அவர்கள் வந்தவுடன் பெண் மயில் கிணற்றை சுற்றிச்சுற்றி பறந்தது. கிணற்றுக்குள் விழுந்த ஆண் மயில் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.  இதைத்தொடர்ந்து மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். திருவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை அதிகாரி (பொ) குணசேகரன் தலைமையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் விழுந்த மயிலை சுமார் ஒரு மணிநேரம் போராடி கயிறு கட்டி உள்ளே இறங்கி உயிருடன் மீட்டனர்.

மயிலின் உடலில் சிறு சிறு காயங்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து ஆண் மயிலை திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் வனத்துறையினரிடம் தீயணைப்புத் துறை அதிகாரி குணசேகரன் ஒப்படைத்தார். தீயணைப்புத் துறையினர் ஆண் மயிலை மீட்கும் வரை கிணற்றை சுற்றியே அருகிலுள்ள மரங்களில் அமர்ந்து பெண் மயில் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: