திருப்போரூர் கந்தசுவாமி கோயில் குளத்தின் நீராழி மண்டபத்தில் ஏறி நடனமாடிய பெண்ணால் பரபரப்பு

சென்னை: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலை ஒட்டி சரவணப்பொய்கை என்ற திருக்குளம் உள்ளது. மிகவும் ஆழமான குளம் என்பதாலும், இதில் இறங்கி குளிக்கும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி இறக்கின்றனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குளத்தின் படிக்கட்டுகளை ஒட்டி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது.  வருகிற 8ம் தேதி தைப்பூசத்தையொட்டி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளதால் அதற்கான மிதவைகள் தயாரிக்கும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் பெண் ஒருவர் குளத்தில் இறங்கி நீந்தி சென்று குளத்தின் நடுவே உள்ள நீராழி மண்டபத்திற்குள் சென்று அங்கிருந்த ஏணிப்படி மூலம் மண்டப கோபுரத்தின் மீது ஏறினார். மேலே அமைக்கப்பட்டிருந்த கோபுர கலசத்தை பிடித்து உலுக்கிய அப்பெண் அங்கேயே நின்றபடி நடனமாடினார்.

இதனால், குளத்தை சுற்றிலும் நின்றிருந்த பொதுமக்கள் அப்பெண்ணை வேடிக்கை பார்த்ததோடு செல்போனில் படமெடுத்தனர்.  இதனால் குளத்தைச் சுற்றிலும் கூட்டம் கூடியது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து அப்பெண்ணை குளத்தை விட்டு வெளியே வருமாறு எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து அப்பெண் கோபுரத்தை விட்டு கீழிறங்கி வந்து நீந்தி குளத்தின் மற்றொரு கரையில் ஏறி வெளியே வந்தார். விசாரணையில் அப்பெண் மனநோயாளி என்பது தெரிய வந்தது.

Related Stories: