நீலாங்கரை சார் பதிவாளர் தர்மபுரிக்கு அதிரடி மாற்றம் புதிய பதவியை பிடிக்க 80 லட்சம் பேரம்

* பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட அதிகாரிகளும், ஆளும்கட்சியினரும் உடந்தை என குற்றச்சாட்டு

சென்னை: நீலாங்கரை சார் பதிவாளர் ஓய்வு பெறுவதற்கு ஓராண்டே உள்ள நிலையில், தர்மபுரிக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மண்டலத்தில்  அதிகமான வருவாயை அரசுக்கு ஈட்டி தருவது தென்சென்னை பதிவு மாவட்டம். அதிலும் மிக முக்கிய நபர்கள் வசிக்கும் ஈஞ்சம்பாக்கம், பனையூர், நீலாங்கரை, பாலவாக்கம், கொட்டிவாக்கம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகம் மாநிலத்திலேயே அதிகப்படியான வருமானத்தை பத்திரப்பதிவின் மூலம் அரசுக்கு அளிக்கிறது. இத்தகைய அதிக வருமானம் அரசுக்கு மட்டுமல்ல அங்கு பணிபுரியும் சார் பதிவாளருக்கும் தனியாக கிடைக்கிறது என்பது ஊரறிந்த உண்மை. அதேநேரத்தில், நீலாங்கரை சார் பதிவாளர் பதவி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தென் சென்னையில் நீலாங்கரை, வேளச்சேரி, சைதாப்பேட்டை, தாம்பரம், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதி சார்பதிவாளர் பதவிகள் முக்கியமானவை. இங்குதான் பல கோடி ரூபாய் வருவாய் அரசுக்கு வரும். அதேநேரத்தில் பல போலி பத்திரங்களும் அதிகமாக தயாரிக்கப்பட்டு, பதிவாகும். இதனால் வங்கிக்கு பல கோடி ரூபாய் இழப்பும் ஏற்படும். இதனால் தென் சென்னை பகுதியில் உள்ள எந்த பதவியில் இருந்தாலும், சில ஆண்டுகளிலேயே பல நூறு கோடிக்கு அதிபராகிவிடுவார்.

இந்நிலையில் நீலாங்கரை சார் பதிவாளராக ஆறுமுக நவராஜ் பணியாற்றி வந்தார். அவர் ஓய்வு பெறுவதற்கு ஓராண்டுதான் உள்ளது. இந்தநிலையில் அவர் அதிரடியாக தர்மபுரிக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார். அந்த பதவிகள் ₹80 லட்சம் முதல் 1.50 கோடி வரை விலை போகிறது. கோட்டையில் உள்ள அதிகாரத்தை உள்ளவருக்கும், அதிகாரிகளுக்கும் பணம் கொடுத்தால் இந்தப் பதவிகளைப் பிடிக்கலாம்.  நீலாங்கரை சார் பதிவாளர் பதவியைப் பிடிக்க ₹80 லட்சத்தை தென் சென்னையில் போலி பத்திரங்கள் அதிகமாக பதியப்படும் இடத்தைச் சேர்ந்த ஒருவர் கோட்டையில் உள்ள செல்வாக்கானவருக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் நீலாங்கரை பதவியை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பணம் கொடுத்து காத்திருப்பவரின் பகுதியில்தான் அதிகமான அளவில் போலி பத்திரங்கள் பதியப்படுகின்றன. அதிகமான அளவில் புறம்போக்கு இடங்களும், சதுப்பு நிலங்களும் இருப்பதால் ஒரு நிலத்துக்கு 4 முதல் 5 பேர் வரை பத்திரங்களை பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவருமே அந்த இடத்துக்கு உரிமை கொண்டாடுவார்கள்.

அதில் சிலர், போலி பத்திரங்களை வைத்து வங்கியில் பல கோடி ரூபாய் கடன் வாங்குவார்கள். பின்னர் அந்தப் பணத்தை கட்ட மாட்டார்கள். வங்கியும், தன்னிடம் அடமானமாக வைத்துள்ள பத்திரத்தை வைத்து நிலத்தை பறிமுதல் செய்வார்கள். அதை விற்கவோ, ஏலம் விடவோ முயற்சிக்கும்போதுதான் அந்த இடத்தில் வில்லங்கம் இருப்பது தெரியவரும். இந்த இடத்துக்கு 2 அல்லது 3 பேர் நீதிமன்றத்தில் உத்தரவுகளை வாங்கி வைத்திருப்பார்கள். இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு உருவாகிறது. அதில் தென் சென்னையில் மட்டும் இதுபோல போலி பத்திரங்கள் மூலம் பதிவு நடந்ததாகவும், வங்கி மோசடி நடந்ததாகவும் இதுவரை 3800 புகார்கள் வந்துள்ளன. இதனால் பத்திரப்பதிவு மூலம் ஒரு பக்கம் வருவாய் வந்தாலும், அதை விட பல மடங்கு வங்கி மோசடியில் இழப்பு ஏற்பட்டு விடுகிறது.   நவராஜ், இங்கு சார்பு பதிவாளராக பணிபுரிந்து கொண்டிருக்கும் போதே ஆறு மாதங்களுக்கு முன்னரே அருகில் உள்ள ஒரு இடத்தில் பணியாற்றுகிறவர், நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாறுதல் கேட்டு மிக முக்கிய நபரிடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்துவிட்டதாக நம்பப்படுகிறது. அதனால் அவர் சார் பதிவாளரை உடனே மாற்றம் செய்துவிட்டு தன்னை உடனடியாக அங்கேயே நியமியுங்கள் என்று பணம் கொடுத்த நபரிடம் நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே நவராஜ் அங்கிருந்து மாற்றிவிட்டு இன்னும் ஓரிரு தினங்களில் பணம் கொடுத்த பக்கத்து இடத்தில் உள்ள பதிவாளர் ஒருவரை நியமிக்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட விஜிபி லே-அவுட் மாடல் லே-அவுட் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலைகளில் அமைந்துள்ள மிகப் பழமையான ஆளில்லாத அல்லது உரிமையாளர் வெளியூரில் வசிக்கும் மனைகளை அடையாளம் கண்டறிந்து போலியாக ஆவணங்களை தயார் செய்து அரசு முத்திரைகளையும் அதில் போலியாக அச்சடித்து இந்த அலுவலகத்தில் பல லட்சங்களும் கோடிகளும் தவறான வழியில் தீட்டப்படுகின்றன என்று தெரியவருகிறது. கிரவுண்ட் ஒன்றுக்கு ரூ 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை பெற்றுக் கொண்டு போலி ஆவணங்களை பதிவிற்கு உடந்தையாக சார்பதிவாளர்கள் இருந்து வருகின்றார்கள் அவ்வாறு கிடைக்கும் பணத்தில் கோடிகோடியாக சம்பாதிக்க முடியும் என்று சில சார்பதிவாளர்கள் நீலாங்கரை அலுவலகத்திற்கு மாறுதல் கேட்டு விரும்புகின்றனர்.

அந்த வகையில் ஒரு கோடி என்பது ஒரே மாதத்தில் சம்பாதித்து விடலாம் என்ற அதீத நம்பிக்கையில் தற்போதைய இங்கு வர விரும்பும் சார்பதிவாளர் உள்ளார், அவர் பணிபுரிந்து கொண்டிருக்கும் பகுதிகளில் கட்டுமான தொழிலிலும் நில அபகரிப்பில் ஈடுபடும் கும்பலிடம் லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு அடுத்தவர் நிலத்தை போலியாக ஆவணப்பதிவு செய்வதில் கில்லாடி என்று பெயரெடுத்தவர் என்றும் கூறப்படுகிறது.

அந்த நில அபகரிப்பு கும்பல் இவரை எப்படியாவது நீலாங்கரை சார்பதிவாளர் ஆக நியமித்து அங்கும் தங்களது வேலையை காட்ட வேண்டும் என்ற  எண்ணத்தில் அவரை வற்புறுத்தி ஆசை காட்டி அங்கே பணி மாறுதல் பெறுவதற்கு துணையாக உள்ளனர். ஆகவே இந்த நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகம் நியமனம் மற்றும் மாறுதல் புதிதாக அங்கே வருபவர் ஆகியவற்றை குறித்து ஒரு விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இதில் தீவிரமாக கவனம் செலுத்தி மாறுதல் சென்ற சார்பதிவாளர் உட்பட தற்போது புதியதாக வரும் சார்பதிவாளர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் நீலாங்கரை பகுதிவாழ் மக்களின் கருத்தாக உள்ளது என்கின்றனர் பொதுமக்கள்.

Related Stories: