பீனிக்ஸ் பறவை போன்ற வடிவமைப்பு முடிப்பதில் சவால் ஜெயலலிதா நினைவிடம் பிப்.24ல் திறப்பு இல்லை

* கட்டுமான பணிகளை முடிக்க மார்ச் 31 வரை அவகாசம்

* முதல்வர் எடப்பாடி உத்தரவு

சென்னை: ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணியை முடிக்க மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு ₹50.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ஜெயலலிதா நினைவு மண்டப கட்டுமான பணிக்கு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. ெதாடர்ந்து, மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அமைக்கப்படும் கட்டுமான பணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2018 மே 7ம் தேதி அடிக்கல் நாட்டினார். இதைதொடர்ந்து, அன்றைய தினத்தில் இருந்து உடனடியாக கட்டுமான பணி தொடங்கப்பட்டு இரவு, பகலாக பணி நடந்து வருகிறது. குறிப்பாக, நடைபாதை, வாகன நிறுத்தம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. அருங்காட்சியகம், அறிவுசார் மையம் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளன. இந்நிலையில், மெயின் கட்டிடத்தில் சூப்பர் ஸ்டெக்சர் வடிவமைப்பு மட்டும் அமைக்கப்படுகிறது. அதாவது, பீனிக்ஸ் பறவை தோற்றம் 15 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. இறக்கை மட்டும் 2 பக்கமும் 21 மீட்டர் வரை அமைக்கப்படுகிறது. இதற்காக, துபாயில் இருந்து கப்பல் மூலம் கட்டுமான பொருட்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

இந்த பீனிக்ஸ் பறவை பொருத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு துபாயில் இருந்து பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள், ஜார்கண்ட், ஒடிசா மாநிலங்களை சேர்ந்த ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் சூப்பர் ஸ்டெக்சர் வடிவமைப்புடன் கூடிய பீனிக்ஸ் பறவை இறக்கை பொருத்தும் பணி நடந்து வருகிறது. கான்கிரீட் கலவையை மட்டுமே பயன்படுத்தி பீனிக்ஸ் பறவை போன்ற வடிவமைப்பு அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி மிகவும் சவாலாக அமைந்து இருப்பதால், பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன், கண்காணிப்பு பொறியாளர் ஆயிரத்து ராஜசேகர் தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தவுடன் நினைவிடம் முழுவதும் இத்தாலி மார்பிள் பதிக்கப்பட இருக்கிறது. அதன்பிறகு எம்ஜிஆர் நினைவிடமும் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதிக்குள் இப்பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதன்மை தலைமை பொறியாளர் ராஜமோகனுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஜெயலலிதா நினைவிட பணியில் அவசரம் காட்ட வேண்டாம். இந்த பணிகளை நாடே உற்றுநோக்கி பார்க்கிறது. எனவே, அனைத்து பணிகளை முடித்து விட்டு செய்தி மக்கள் தொடர்பு துறையிடம் ஒப்படைத்தால் போதும். எனவே, நினைவிட கட்டுமான பணிகளை முடிக்க வரும் மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கி இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: