டிஎன்பிஎஸ்சி மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஜெயகுமாரை பிடிக்க முடியாமல் சிபிசிஐடி திணறல்

* மாறு வேடத்தில் அமைச்சர் ஒருவரை சந்தித்ததாக தகவல்

சென்னை: டிஎன்பிஎஸ்சி மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஜெயகுமாரை பிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர். இதற்கிடையே தலைமறைவாக உள்ள நிலையில் மாறு வேடத்தில் அவர் அமைச்சர் ஒருவரை சந்தித்து பேசியதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்வாளியாக முகப்பேரை சேர்ந்த ஜெயகுமாரை தேடப்படும் குற்றவாளியாக சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர். ஜெயகுமார் அரசின் உயர் அதிகாரி போல் தான் காரில் சுற்றி வருவார். வழக்கமாக ஜெயகுமார் தாடி வைக்க மாட்டார். சிபிசிஐடி வெளியிட்ட புகைப்படத்தில் ஜெயகுமார் தாடியுடன் உள்ளார். அது ஜெயகுமார் ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்காக தாடி வைத்திருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம். அந்த புகைப்படத்தை வைத்து ஜெயகுமாரை கண்டுபிடிக்க முடியாது.

ஜெயகுமார் தலைமறைவான நாள் முதல் அவர் செல்போன் பயன்படுத்த வில்லை. அதற்கு பதில் பொது தொலைபேசியை தான் அவர் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயகுமாருக்கு தமிழகம் மற்றும் சொந்த மாநிலமான கேரளா முழுவதும் ஆட்கள் உள்ளதால் அவரை நெருங்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர். இதற்கிடையே தலைமறைவாக உள்ள ஜெயகுமார் மறு வேடத்தில் அமைச்சர் ஒருவரை நள்ளிரவில் ரகசியமாக சந்தித்து பேசியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக ஆதாரமாக சிசிடிவி பதிவு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஜெயகுமாரை சிபிசிஐடி போலீசார் பிடித்து விசாரணை நடத்தினால் மோசடிக்கு பின்னணியில் உள்ள அமைச்சர் யார் என்பது குறித்து முழுவிபரங்கள் வெளியே வரும் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: