ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை: கணக்கில் வராத ரூ.24 கோடி பறிமுதல்...தங்க நகைகள் கைப்பற்றியதாக தகவல்

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி படம் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ், பிகில், தனி ஒருவன், அனேகன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்து   வெளியிட்டுள்ளது. மேலும் ஏஜிஎஸ் குழுமத்திற்கு சொந்தமாக திரையரங்குகளும் உள்ளன. இந்நிலையில், விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ்  நிறுவனம் அந்த படத்தால் மிகப்பெரிய லாபம் பெற்றதாகவும் அந்தப் படம், ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.

ஒருபக்கம் பிகில் படம் பெரிய அளவில் லாபம் கொடுத்தது என்று கூறப்பட்டாலும் இன்னொரு பக்கம் பிகில் திரைப்படம் நஷ்டம் என்றும் போட்ட முதலீடு கூட  தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இதற்கிடையே, வரி ஏய்ப்பு புகாரில் சென்னை தியாகராய நகரில் உள்ள வீடு மற்றும்  தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர்  சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச்செழியன் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தயாரிப்பாளர் அன்புச்செழியன், ஏ.ஜி.எஸ். குழும அலுவலகங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.24 கோடி பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், தங்க நகைகளும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

நடிகர் விஜய் வீட்டில் சோதனை:

நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சி.ஐ.எஸ்.எப்.  வீரர்களுடன் அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜய்யிடம் நேரில் சம்மன் அளித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் விசாரணையும்  நடத்தினர். தொடர்ந்து நடிகர் விஜய்யை விசாரணைக்காக வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்றனர்.

இதனால் மாஸ்டர் படைப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. வருமான வரித்துறையின் இன்னோவா காரில் அதிகாரிகள் புடைசூழ நடிகர் விஜய்  சென்னை அழைத்து வரப்படுகிறார். விஜய் தமக்கு சொந்தமான ஜாகுவார் காரில் பயணம் செய்ய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 4 பேர் கொண்ட குழு சோதனை நடத்தி  வருகிறது. பிகில் திரைப்படத்திற்கு நடிகர் விஜய் பெற்ற சம்பளம் தொடர்பாக சோதனை என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: