எரிமலையில் வெளியேறும் மூன்று வகை லாவாக்கள்!

எரிமலை குமுறும்போது வெளிவரும் உருகிய பாறைக் குழம்பை லாவா என்பார்கள். இது எரிமலையின் துளையிலிருந்து வெளிவருகையில் இதன் வெப்பநிலை 700 °C முதல் 1200 °C வரை இருக்கும். லாவாவின் பாகுநிலை நீரை விட சுமார் 100,000 மடங்கு அதிகமாக இருப்பினும், இக்கொதிக்கும் பாறைக் குழம்பு வெகுதூரம் உறையாமல் ஓடக்கூடியது. சில இடங்களில் எரிமலை வெடித்து சிதறாமலேயே லாவா குழம்பு எரிமலை முகத்துவாரத்திலிருந்து வெளிவருவதும் உண்டு. பூமியின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகளில், 95 விழுக்காடு காணப்படும் தீப்பாறைகள், எரிமலைக் குழம்பு உறைந்து பாறையாவதினால் உருவானவையாகும். எரிமலைகளிலிருந்து வெளிவரும் லாவா குழம்பு குளிர்ந்து இறுகி தீப்பாறைகளாக உருவெடுக்கிறது. லாவா என்ற பதம் இத்தாலிய மொழியிலிருந்து வந்ததாக அறியப்படுகிறது.

லாவா குழம்பின் உட்கூறுகள் எரிமலைகளுக்கிடையே வேறுபடுகிறது. லாவா குழம்பின் பண்புகள், அதன் உட்கூறுகளைக்கொண்டே நிர்ணயம் செய்யப்படுகின்றன. லாவா குழம்பின் வேதியியல் பண்புகளின்படி, மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை, மிகுந்த பாகுத்தன்மை கொண்ட பெல்சீக் வகை (felsic), இடைப்பட்ட பாகுத்தன்மை கொண்ட வகை, குறைந்த பாகுத்தன்மை கொண்ட மாபிக் வகை (mafic) ஆகும். பெல்சீக் வகை லாவாவில், சிலிக்கா, அலுமினியம் பொட்டாசியம், சோடியம், கால்சியம், குவார்ட்சு ஆகிய வேதியியல் பொருள்கள் பெருமளவில் காணப்படுகின்றன. மிகுந்த பாகுத்தன்மை கொண்டதனால், இவ்வகை லாவா மிகக்குறைவான வேகத்தில் பாயும் தன்மையைப் பெற்றுள்ளது. மேலும், பெல்சீக் வகை லாவா, மற்ற லாவா வகைகளை விட குறைந்த வெப்பநிலையான 650 °C முதல் 750 °C வரையிலான வெப்பநிலையிலே அளவிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இவ்வகை லாவா பல கிலோமீட்டர் பாயும் ஆற்றல் கொண்டவை. இடைப்பட்ட பாகுத்தன்மை கொண்ட லாவாவின் வெப்பநிலை பெல்சீக் வகை லாவாவை விடக் கூடுதலாகவும்(சுமார் 750 முதல் 950 செல்சியஸ் வரை), பாயும் வேகம் அதிகமாகவும் காணப்படுகிறது. இவ்வகை லாவாவில், அலுமினியம் மற்றும் சிலிக்கா ஆகியவற்றின் அளவு குறைவாகவும், இரும்பு மற்றும் மாங்கனிசு ஆகியவற்றின் அளவு அதிகமாகவும் காணப் படுகிறது. இரும்பு மற்றும் மாங்கனிசு ஆகியவற்றினால், இக்குழம்பு கருஞ்சிவப்பு நிறத்தை கொண்டுள்ளது. மூன்றாவது வகையான மாபிக் லாவாவின் வெப்பநிலை மிக உயர்ந்ததாகவும் (950 செல்சியஸ்), விரைவாக ஓடக்கூடியதாகவும் இருக்கும்.

Related Stories: