ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முன்புறம் ஜிஎஸ்டி சாலையில் 9 கோடியில் புதிய நடைமேம்பாலம் : முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

சென்னை:  சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இரண்டு வழித்தடங்களும் உயர்மட்ட நிலையில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சந்திக்கின்றன. இந்த மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முன்புறம் உள்ள அதிக போக்குவரத்து மிக்க ஜி.எஸ்.டி. சாலையின் எதிர்புறத்தில் உள்ள ஆசர்கானா பேருந்து நிறுத்தத்திற்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக சென்றடைவதற்கு ஒரு நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தால் நிதியுதவி வழங்கப்பட்டு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ₹9 கோடியே 7 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த நடைமேம்பாலம் 55.41 மீட்டர் நீளமும், 6.41 மீட்டர் அகலமும் கொண்டது. மேலும், பக்கத்திற்கு ஒன்றாக 2 மின்தூக்கிகள், 4 நகரும் படிக்கட்டுகள், சிசிடிவி கேமராக்கள், நடைபாதையின் அனைத்து பகுதிகளிலும் எல்.இ.டி. மின்விளக்குகள், மாற்றுத்திறனாளிகள் நடைபாதையில் இருந்து மின்தூக்கிக்கு செல்வதற்கு ஏதுவாக சாய்தளம் மற்றும் நடைபாதையில் எவர்சில்வர் கைப்பிடிகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.சி. சம்பத், தலைமை செயலாளர் சண்முகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் பங்கஜ்குமார் பன்சல் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: