சிறையில் இருந்து வெளியே வந்த 4 நாட்களில் வீடுபுகுந்து நகை, செல்போன் பறிப்பு: 2 வாலிபர்கள் கைது ,.. 6 சவரன், பைக் பறிமுதல்

ஆவடி: சிறையில் இருந்து வெளியே வந்த 4 நாட்களில் திருமுல்லைவாயல் பகுதி வீடுகளில்  புகுந்து பெண்களிடம் செயின், செல்போன் பறித்த வாலிபர்களை போலீசார் கைது செய்து, நகை, பைக் பறிமுதல் செய்தனர். ஆவடி அடுத்த அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மனைவி சுலோச்சனா (64). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டு போர்டிகோவில் ஊஞ்சலில் அமர்ந்தபடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் கேட்டை திறந்து உள்ளே புகுந்துள்ளார். பின்னர் அவர், சுலோச்சனா வைத்திருந்த செல்போனை பறித்துள்ளார்.  இதையடுத்து சுலோச்சனா போட்ட சத்தம் கேட்டு பக்கத்து வீடுகளில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர் செல்போனுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

அண்ணனூர், பாலாஜி நகர், 6வது தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி மேனகா (29). தனியார் பள்ளி ஆசிரியை.  நேற்று முன்தினம் இரவு மேனகா வீட்டு முன் அறையில் அமர்ந்து குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து, அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்து உள்ளான்.  அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர் தங்கச்சங்கிலியுடன் வீட்டில் இருந்து தப்பி ஓடி தலைமறைவானார். ஆவடி அருகே அயப்பாக்கம், அம்பிகை நகர்,  வி.ஜி.என் பிளாட்டினா குடியிருப்பை சேர்ந்தவர் மனோஜ்குமார் (30). தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.  நேற்று முன்தினம் இரவு மனோஜ்குமார் கடைக்கு சென்று மருந்து பொருட்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் இவரை வழிமறித்தனர். பின்னர், அவர்களில் ஒருவன் பைக்கிலிருந்து இறங்கி வந்து மனோஜ்குமாரின் கையிலிருந்த செல்போனை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிவிட்டனர்.

மேற்கண்ட 3 குற்ற  சம்பவங்கள் குறித்தும் திருமுல்லைவாயல் காவல்நிலையத்தில் தனித்தனியாக புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், எஸ்.ஐ விஜயகுமார் ஆகியோர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடினர்.

இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட ஆவடி, கோணம்பேடு கிராமத்தைச் சார்ந்த பாபு (19), கொளத்தூர், ஜி.கே.எம் காலனி, 23 வது தெருவை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (20) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.     இதில், பாபு ஏற்கனவே குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து கடந்த 4 நாட்கள் முன்பு தான் வெளியே வந்துள்ளார். இதன் பிறகு, இவர்கள் இருவரும் சேர்ந்து செயின் பறிப்பு, வழிப்பறியில் ஈடுப்பட்டது தெரியவந்தது. மேலும், இருவரும் கொடுத்த தகவலின் படி 6 சவரன்  சங்கிலி, பைக், 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: