உள்ளாட்சி தேர்தல் விவகாரம்: தமிழக அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: மாநகராட்சி, நகராட்சிக்கும் சேர்த்து தேர்தலை நடத்தாமல் உத்தரவை மீறி செயல்பட்ட தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில் விசாரணை நடைபெறவில்லை. வழக்கு விரைவில் மீண்டும் பட்டியலிடப்படு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 7ம் தேதி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை பஞ்சாயத்து, மாநகராட்சி, மற்றும் நகராட்சி என அனைத்திற்கும் மொத்தமாகதான் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய முந்தைய உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

ஆனால், தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தை பொறுத்தமட்டில் கிராமப்புற ஊரக தேர்தலை மட்டும் நடத்திவிட்டு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு நடத்தாமல் விட்டுவிட்டது. மேலும் அதுகுறித்த அறிவிப்பணையைக் கூட இன்னும் வெளியிடவில்லை. இது நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். அதனால் தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் பட்டியலிடப்பட்டது. ஆனால் சபரிமலை வழக்கை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்ததால் தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதையடுத்து வழக்கு அடுத்த ஓரிரு நாளில் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

Related Stories: