கொடுங்கையூர் குப்பை கிடங்கில் மறு சுழற்சி செய்ய முடியாத குப்பைகளை எரிக்க திட்டம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

பெரம்பூர்: சென்னை மாநகராட்சியில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் குப்பையின் அளவை குறைக்க, சென்னை மாநகராட்சி பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. பொதுமக்களிடம் இருந்து குப்பைகளை தரம் பிரித்து வாங்குவது, பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள், உணவகங்கள் ஆகிய இடங்களில் குப்பைகளை மறுசுழற்சி செய்து அவர்களே உரம் தயாரித்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை  சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.சென்னையில் 2 குப்பை கிடங்குகளில் அதிக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. ஒன்று பெருங்குடி. மற்றொன்று கொடுங்கையூர் குப்பை கிடங்குகள். சென்னையில் இருந்து திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக  நகர், அம்பத்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட 8 மண்டலங்களில் இருந்து கொடுங்கையூர் குப்பை கிடங்கில் மட்டும் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் முதல் 2200 டன் வரையில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகளை அகற்றுவது மாநகராட்சிக்கு மிகுந்த சவாலாக இருந்து வருகிறது. இதில் குப்பையை தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை, மரக்கழிவுகள், கட்டிட கழிவு என தனித்தனியாக குப்பையை பிரித்தெடுத்து அழித்து  வருகின்றனர்.

சென்னை மாநகராட்சிக்கு தற்போது மக்காத குப்பைகளை அழிப்பது ஒரு சவாலாகவே உள்ளது. இதற்காக மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை எரிப்பதற்காக கொடுங்கையூரில் 2 ஏக்கர் பரப்பில் புதிதாக உபகரணங்கள் வாங்கப்பட உள்ளன.  இதற்காக இடம் தேர்வு செய்யபட்டு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.இதன் மூலம் நாள் ஒன்றுக்கு மறு சுழற்சி செய்ய முடியாத 50 டன் குப்பைகளை எரிக்க முடியும் என மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது. இதேபோல கட்டிட கழிவுகளை பொடியாக்கி ஹாலோ பிளாக் கல் செய்ய மாநகராட்சி அதிகாரிகள்  திட்டமிட்டுள்ளனர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘மறு சுழற்சி செய்ய முடியாத குப்பைகளை எரிக்க  கொடுங்கையூர் குப்பை மேட்டில் 4 ஏக்கர் நிலம் தயார் படுத்தப்பட்டுள்ளது. இதேப்போன்று மரக்கழிவுகள் மற்றும் தோட்ட கழிவுகளை  மறுசுழற்சி செய்து உரம் தயாரிக்கவும் 2 ஏக்கர் நிலம் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி 2 மாதத்தில் தொடங்கும்.

இதற்காக மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், சுகாதார துணை ஆணையர் மதுசூதன ரெட்டி, தலைமை பொறியாளர் மகேஷ்வரன், திடக்கழிவு மேலாண்மை துறை மேற்பார்வை பொறியாளர் வீரப்பன், 4வது மண்டல அதிகாரி காமராஜ் உள்ளிட்ட  அதிகாரிகள் கடந்த வாரம் கொடுங்கையூர் குப்பை மேடு முழுவதும் ஆய்வு செய்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.கொடுங்கையூர் குப்பை மேட்டில் 1987 முதல் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் மக்காத குப்பைகள் மலை போல குவிந்துள்ளன. இதனால் அந்த பகுதியை சுற்றியுள்ள கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, எம்.கே.பி நகர் உள்ளிட்ட பகுதி  வாழ் மக்களுக்கு அடிக்கடி சுவாச கோளாறும் மர்ம காய்ச்சலும் பரவி வருகிறது. இந்த மக்காத குப்பைகளை படிப்படியாக முற்றிலும் அழிப்பதன் மூலம் இப்பகுதி மக்களின் நீண்ட கால பிரச்சனை ஓரளவிற்கு குறையும்’’ என்றனர்.

Related Stories: