உள்ளகரம்-ஆதம்பாக்கம் நியூ பிரின்ஸ் பள்ளிகள் சார்பில் அறிவியல் கண்காட்சி நிறைவு விழா: அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு

சென்னை: உள்ளகரம்-ஆதம்பாக்கம் நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளின் சார்பில் அறிவியல், கலை மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி கல்வி குழும தலைவர் கே.லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர்கள் எல்.நவீன்பிரசாத், எல்.அர்ச்சனா, செயலாளர் வி.எஸ்.மகாலட்சுமி முன்னிலை வகித்தனர். தென்சென்னை முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் மற்றும் முன்னாள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர்  த.சந்திரசேகரன் ஆகியோர் விழாவை துவக்கி வைத்து பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். கண்காட்சி நிறைவு  விழாவில் தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ மற்றும் தமிழக அரசின் கூடுதல்  தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர் பங்கேற்று மாணவர்களின் படைப்புகளை  பார்வையிட்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். மேலும் நியூ பிரின்ஸ் கல்வி குழுமத்தின் 36 ஆண்டு கால கல்வி சேவையை பாராட்டி விழா மலரை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வெளியிட முதல் பிரதியை தமிழக அரசின்  கூடுதல்  தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பெற்றுக்கொண்டார்.

விழாவில் இறையன்பு ஐஏஎஸ் பேசுகையில், ‘‘நியூ பிரின்ஸ் பள்ளிகள் கல்வியுடன் அறிவியல் மற்றும் கலை ஆர்வத்தை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் இதுபோன்ற காண்காட்சிகளை ஏற்பாடு செய்து  வருகிறது. இதன் மூலம் மாணவர்களின் தனித்திறமை மேம்பட நல்ல வாய்ப்பாக அமையும். இதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நியூ பிரின்ஸ் கல்வி குழுமம் 36 ஆண்டு காலம் தரமான கல்வியை  இலாப நோக்கமின்றி வழங்கி வருகின்றது. இந்த சேவை மேலும் தொடர வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்’’ என்றார். இதில் முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என்.சி.கிருஷ்ணன், பி.எ.ஜெயச்சந்திரன், ஜெ.கே.மணிகண்டன், எம்.ஆர். நரேஷ்குமார், அரசு போட்டி தேர்வு பயிற்சி மையத்தின் முதல்வர் ஆர்.ராமன், அரசு கலை  கல்லூரி பேராசிரியர்கள் எஸ்.ரகு, வி.தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் திரைப்பட நடிகர் நிழல்கள் ரவி சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழாவில் ஆதம்பாக்கம் பள்ளியின் முதல்வர் கே.அமுதா, ஒருங்கிணைப்பாளர் எம்.கே.ஸ்ரீவித்யா, ஆலோசகர்கள் கே.பார்த்தசாரதி, எம்.விஜயகுமார், ரேமண்ட் கொர்னேலி, நேசலின் கொர்னேலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: