பெற்றோரை இழந்த பேரக்குழந்தையை கோயிலில் விட முயன்ற முதியவர்: திருவண்ணாமலையில் அதிர்ச்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிளி கோபுரம் அருகே நேற்று ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் ஒரு முதியவர் நீண்ட நேரமாக உட்காந்திருந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரிடம் விசாரித்தனர். அவர் ஆரணி அடுத்த மலையாம்பட்டைச் சேர்ந்த சீதாராமன்(77). இவரது மகள் செல்வியும், அவரது கணவரும் ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டார்களாம். அவர்களது ஒன்றரை வயது ஆண் குழந்தையை சீதாராமன் பராமரித்து வந்துள்ளார்.

சீதாராமனின் மனைவி ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் குழந்தையை பராமரிக்க முடியாமல் தவித்துள்ளார். இதனால் அண்ணாமலையார் கோயிலில் விட்டுசென்றால், யாராவது நல்ல முறையில் வளர்ப்பார்கள் என கருதி வந்துள்ளார் என  தெரிய வந்தது. இத்தகவலை அவர் கண்ணீருடன் தெரிவித்தார். போலீசார் கொடுத்த தகவலின்பேரில் ‘சைல்டு ஹெல்ப் லைன்’ ஊழியர்கள் பாலையா, தெய்வக்கன்னி ஆகியோர் வந்து குழந்தையை மீட்டு, குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்திடம் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள  ஆதரவற்ற குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் குழந்தை சேர்க்கப்பட்டது. முதியவர் சீதாராமன் குறித்து விசாரித்து அவரையும் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: