நிர்பயா பாலியல் குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கக் கோரிய வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்

புதுடெல்லி: நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கக் கோரிய வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

நிர்பயா வழக்கு:

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1ம் தேதி (நேற்று) தூக்கில் போடுவதற்கு முதலாவதாக உத்தரவிடப்பட்டது.  இதைத்தொடர்ந்து தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், குற்றவாளிகள் குறித்த சட்ட விசாரணைகள் அனைத்தும் நிலுவையில்  இருப்பதால் அவர்களை தூக்கில் போட இடைக்கால தடை விதிப்பதாகவும், இது அடுத்த விசாரணையின் இறுதி உத்தரவு வரும் வரை தொடரும் என நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதனால் நிர்பயா பாலியல் வழக்கில் குற்றவாளிகளின்  தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மறுப்பு:

இதற்கிடையே, தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி 4 குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பியிருந்தார். அதை பரிசீலனை செய்த  ஜனாதிபதி, மனுவை நிராகரிப்பதாக நேற்று உத்தரவிட்டார். இதில் குற்றவாளிகளில் முகேஷ் குமார் சிங் மற்றும் வினய் சர்மா ஆகியோரது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்துள்ளதால் அவர்களை தூக்கிலிடுவதற்கான தடை தற்போது  நீங்கியுள்ளது. இந்த நிலையில் மூன்றாவதாக குற்றவாளி அக்சய் தாக்கூர் கருணை கேட்டு ஜனாதிபதிக்கு நேற்று மனு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு புதிய மனு:

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் கெயிட் அமர்வில் விசாரணைக்கு  வந்தது. மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதிட்டார். சட்டத்தை பயன்படுத்தி தாங்கள் செய்த குற்றத்தில் இருந்து தப்பிக்க குற்றவாளிகள் முயற்சி செய்கின்றனர். எனவே இவர்களுக்கு நீதிமன்றம் கருணை காட்டக்  கூடாது என்று வாதிட்டார். இதயைடுத்து, வழக்கை நாளை (இன்று) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு:

இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, பாலியல் குற்றவாளிகள் தெலுங்கானாவில் என்கவுன்டர் செய்யப்பட்டதை மக்கள் வரவேற்று கொண்டாடினர். நிர்பயா குற்றவாளிகளின் செயல்களால், மக்கள் நீதித்துறையின் மீது  நம்பிக்கை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. சட்ட வாய்ப்புகள் வழங்கலாம் ஆனால் சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது. இவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க தாமதம் செய்கின்றனர். இது சரியானது அல்ல. எனவே  விரைந்து 4 பேரையும் தூக்கிலிடும் இறுதி தேதியை விரைந்து முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடினார். மத்திய அரசு மற்றும் குற்றவாளிகள் தரப்பு வாதம் முடிந்த நிலையில் தேதி  குறிப்பிடாமல் தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories: