எஸ்எஸ்ஐ. வில்சன் கொலை வழக்கு: குமரி தனிப்படை போலீசார் விசாரித்து வந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றம்

நெல்லை: சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு தமிழக காவல்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன்(57) என்பவர் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், நாகர்கோவில் இளங்கடையை சேர்ந்த தவுபிக் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களை கடந்த 21ம் தேதி முதல் போலீஸ் காவலில் எடுத்து, டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

10 நாட்கள் போலீஸ் காவல் விசாரணை முடிந்ததை தொடர்ந்து இவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 14ம் தேதி வரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை பகுதியில் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் இருந்து ஷேக்தாவுது என்பவரை அங்குள்ள தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் பணம் சப்ளை செய்தவர் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் குற்றவாளிகளுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுவதால் இந்த வழக்கை  தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரணைக்கு மாற்றும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.

இதனால் வில்சன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மத்திய அரசு அனுப்பியது. இதனை தொடர்ந்து வில்சன் கொலை வழக்கு தமிழக காவல்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி தனிப்படை போலீசார் விசாரித்து வந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: