திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் காலியாக உள்ள 7 பணியிடங்களை நிரப்புவதற்கு நடந்த தேர்வில் குளறுபடி: தேர்வை ரத்து செய்து அறநிலையத்துறை அதிரடி

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் காலியாக உள்ள 7 பணியிடங்களை நிரப்புவதற்கு நடந்த தேர்வில் குளறுபடி நடந்து இருப்பதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து இந்த தேர்வு ரத்து செய்யபட்டுள்ளது.  108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ளது. இக்கோயிலில் அர்ச்சனை டிக்கெட் வழங்குபவர், அலுவலக உதவியாளர் உட்பட காலியாக உள்ள 7 பணியிடங்களை நிரப்புவதற்கு நேர்முகத்தேர்வு நடத்த கமிஷனர் பணீந்திர ரெட்டி ஒப்புதல் அளித்தார். 200க்கும் மேற்பட்டோர் இந்த பணியிடங்களுக்காக விண்ணப்பித்திருந்தார். இதை தொடர்ந்து, கடந்த அக்டோபர் 10ம் தேதி விண்ணப்பித்திருந்தவர்களை நேர்முகத்தேர்வுக்கு அழைத்திருந்தனர். இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என கமிஷனர் பரிந்துரை செய்திருந்தார். ஆனால், கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டிக்கு ஏராளமான புகார்கள் சென்றது. விசாரணையில் காலி பணியிடங்களை நியமனம் செய்ய 7 பேரிடம் ₹3 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை லஞ்சமாக பணம் பெறப்பட்டதாகவும், தெரிய வந்தது. இதை தொடர்ந்து அறநிலையத்துறை கமிஷனரின் உத்தரவின் பேரில் கடந்த அக்டோபர் 10ம் தேதி நடந்த தேர்வை ரத்து செய்து கோயில் துணை ஆணையர் (பொறுப்பு) காவேரி அறிவித்துள்ளார். மேலும், காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் மீண்டும் தேர்வு நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்து இருப்பது அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: