வ.உ.சிதம்பரனார் செக்கிழுக்க உத்தரவு பிறப்பித்த குதிரை வண்டி கோர்ட் உட்பட 4 பாரம்பரிய நீதிமன்ற கட்டிடம் புனரமைக்க ரூ.20 கோடி: தமிழக அரசு உத்தரவு

சென்னை: வ.உ.சிதம்பரனார் செக்கிழுக்க உத்தரவு பிறப்பித்த குதிரை வண்டி கோர்ட் உட்பட 4 பாரம்பரிய கட்டிடங்களை புனரமைக்க ₹20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த கட்டிடங்கள் உள்ளன. இந்த பாரம்பரிய கட்டிடங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் அவை சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில், நூற்றாண்டு பழமையான அந்த கட்டிடங்களை பழமை மாறாமல் புனரமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தமிழக பொதுப்பணித்துறையில் பாரம்பரிய கட்டிட பாதுகாப்பு கோட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கோவை கவர்னர் பங்களா, குதிரை வண்டி கோர்ட், வடசென்னை சார்பதிவாளர், மின்ட் அரசு அச்சகம், புதுக்கோட்டை நீதிமன்றம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய கட்டிடங்களை பழமை மாறாமல் புனரமைக்கும் வகையில் இந்த கோட்டம் சார்பில் அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்பேரில், தற்போது, சேலத்தில் உள்ள பாரம்பரிய கட்டித்தில் மாவட்ட நீதிமன்ற கட்டிடம் (பழைய தொழிலாளர் நலத்துறை நீதிமன்றம்) ₹6.31 கோடி, காஞ்சிபுரத்தில் நூற்றாண்டு பழமையான கட்டிடத்தில் மாஜிஸ்திரேட் கோர்ட் ₹1.85 கோடி, கன்னியாகுமரியில் பாரம்பரிய கட்டிடம் (பழைய மாவட்ட நீதிமன்றம்) ₹2.70 கோடி, கோவையில் குதிரை வண்டி கோர்ட் (பழைய தொழிலாளர் நீதிமன்றம்) ₹9.01 கோடி என மொத்தம் ₹19.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.இதில், குதிரை வண்டி கோர்ட் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவை மாநகரின் மையப்பகுதியில் கடந்த 1870ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டிடங்களில் செயல்பட்டு வந்த நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கோர்ட்டில் தான் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாருக்கு தண்டனை வழங்கப்பட்டது. வ.உ.சிதரம்பரனாரை செக்கிழுக்க வைத்த உத்தரவு இந்த கோர்ட்டில் தான் பிறப்பித்ததாக கூறப்படுகிறது.

இந்த 4 பாரம்பரிய நீதிமன்ற கட்டிடங்களுக்கான புனரமைப்பு பணிக்கு விரைவில் டெண்டர் விடப்பட்டு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்படவுள்ளது. வரும் மார்ச் மாதம் முதல்  கட்டுமான பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.

Related Stories: