பிரசாதத்தில் கலப்படம், சுகாதாரமற்ற முறையில் தயாரிப்பு ஏகாம்பரநாதர் கோயில் நிர்வாக அதிகாரிக்கு நோட்டீஸ்

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சுவாமிக்கு படைக்கும் பிரசாதம் சுத்தம், சுகாதாரம் இல்லாமல் தயாரித்து, அதை பக்தர்களுக்கும் விநியோகித்த விவகாரம் தொடர்பாக, கோயில் நிர்வாக அதிகாரிக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் கோயில், மிகவும் பழமை வாய்ந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த கோயிலில் சுவாமிக்கு நெய்வேத்தியமாக படைக்கும் கேசரியில் ரசாயன பவுடர் மற்றும் கலர் பவுடர் கலந்து படைப்பதாகவும், பின்னர் அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதாகவும், அதை சாப்பிடும் பக்தர்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் காஞ்சிபுரத்தை சேர்ந்த தினேஷ்பாபு என்ற பக்தர், காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அனுப்பினார். அதன்பேரில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன ஆலுவலர் அனுராதா தலைமையில், அலுவலர் தீபா உள்பட அதிகாரிகள் நேற்று முன்தினம் ஏகாம்பரநாதர் கோயிலில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கோயில் மடப்பள்ளி சுத்தம், சுகாதாரம் இல்லாமல் இருப்பதும், அங்கு பூச்சிகள், எலிகள் இருந்ததும், கேசரியில் கலப்பதற்காக கலர் பவுடர் இருந்ததும் தெரிந்தது.

இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பிரசாதத்தில் கலப்படம் குறித்து உரிய விளக்கம் அளித்து, 15 நாட்களுக்குள் குறைகளை சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாக அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ‘‘காஞ்சிபுரத்தை சேர்ந்த தினேஷ்பாபு என்ற பக்தர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஏகாம்பரநாதர் கோயில் மடப்பள்ளியில் சோதனை செய்தோம். அப்போது அங்கு உணவு தயாரிப்பவர்கள் கையுறைகள் அணியாமல் இருந்தனர். கேசரியில் கலப்பதற்காக 10 கிராம் அளவுள்ள வண்ண பொடி பாக்கெட்டுகளும் இருந்தன. சமையலறை சுத்தமில்லாமலும், பல இடங்களில் தண்ணீர் தேங்கியும் சுகாதாரமின்றி இருந்தது.

பின்னர், கேசரியில் கலர் பவுடர் சேர்க்கக் கூடாது, உணவு தயாரிக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தினோம். மேலும், இந்த குறைகள் அனைத்தையும் 15 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாக அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்,’’ என்றார். பிரசாதத்தில் கலப்படம் தொடர்பாக கோயில் நிர்வாக அலுவலருக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: