வேலை வாங்கி தருவதாக ₹95 லட்சம் மோசடி வழக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை: வங்கி கணக்கு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

சென்னை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது கடந்த 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். அப்போது 16 பேரிடம் தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.95 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் 2017ல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமீன் வழங்கக்கோரி செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அதில், என் உறவினர் எனக் கூறப்பட்ட பிரபு என்பவரிடம் பணத்தை வசூலித்து கொடுத்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த நபர் என் உறவினர் அல்ல, புகார்தாரரான கணேஷ்குமாரை நான் சந்தித்ததே இல்லை. மேலும் போக்குவரத்துத் துறையின் அனைத்து நியமனங்களும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமே நியமிக்கப்பட்டது. என்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்ய முயன்று வருவதால் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதற்கிடையே, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி மீதுள்ள மோசடி புகாரை மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கு சொந்தமான சென்னை மந்தைவெளி திருவேங்கடம் தெரு விரிவாக்கம் பகுதியில் உள்ள வீடு, கரூர் அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் உள்ள பூர்வீக வீடுகள் மற்றும் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது சகோதரர் அசோக் வீடு மற்றும் அவரது டெக்ஸ்டைல் நிறுவனம் என 5 இடங்களில் உதவி கமிஷனர் தலைமையிலான மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று காலை 6.30 மணி முதல் அதிரடி சோதனை நடத்தினர். இதேபோல் சென்னை, கரூர், திருவண்ணாமலை, கும்பகோணத்தில் 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னை மந்தைவெளியில் உள்ள வீடு பூட்டப்பட்டிருந்ததால் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையிலான 4 போலீசார் பூட்டிய வீட்டிற்கு சீல் வைத்தனர்.

முன்ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி மனு

முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ‘புகாரில் என்னுடைய பெயர் இல்லை. அரசியல் விரோதம் காரணமாக  பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனக்கு சொந்தமான இடங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அடுத்தக்கட்டமாக என்னை கைது செய்ய கூடும். எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் நீதிபதி சேஷசாயி முன்பு நேற்று முறையிடப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதி, முன்ஜாமீன் வழக்கை பிப். 3-ம் தேதியன்று விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்தார்.

கரூர் வீட்டின் முன்பு மக்கள் கூடியதால் பரபரப்பு

கரூர் அடுத்த ராமேஸ்வரப்பட்டினத்தில் உள்ள செந்தில்பாலாஜி வீட்டில் காலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது. உடனே நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீட்டின் முன்பு ஒன்று கூடி தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

Related Stories: