தொடக்கப் பள்ளிகளில் புதிதாக 3600 ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு

சென்னை: தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வரையில் தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் 3600 இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய, அரசு, நகராட்சி  தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நிரப்பிக் கொள்ளலாம் என்று தொடக்க கல்வித்துறைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, மேற்கண்ட பள்ளிகளில் காலியாக உள்ள 3624 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பும் வரை தற்காலிகமாக தொகுப்பூதியமாக ரூ.7500 மாத ஊதியத்தில் அமர்த்த தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த பணியிடங்கள் பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் முடிய 3 மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும். அந்தந்த பள்ளிகளில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் தகுதியுள்ள நபர்கள் நியமிக்கப்பட வேண்டும். இது  தற்காலிக பணி மட்டுமே என்று தெரிவித்து நிரப்ப வேண்டும். தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் நலன் கருதியே இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் ஏதும் வழங்கக்கூடாது. 3 மாதங்களுக்கு தற்காலிக அடிப்படையில் நிரப்பிக்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் பட்டியல்களை தொடக்க கல்வித்துறைக்கு தொகுத்து அனுப்ப வேண்டும் என்றும் தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: