×

சர்வதேச தொழுநோய் ஒழிப்பு தினம் இன்று!..

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 30ம் தேதி சர்வதேச தொழுநோய் ஒழிப்பு தினம் (World Leprosy Eradication Day) கடைபிடிக்கப்படுகிறது. தொழுநோயோடு வாழும் மக்களுக்கு உதவுவது, அவர்களை கவனித்துக் கொள்பவர்கள் மட்டுமின்றி அனைவரிடத்திலும் விழிப்புணர்வினை ஏற்படுத்துவது போன்றவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

Mycobacterium leprae என்ற பாக்டீரியாவால் தொழுநோய் ஏற்படுகிறது. இதனால் கை மற்றும் கால்களை உருக்குலைக்கும் புண்களும் நரம்பு சிதைவும் உண்டாகின்றன. இந்தத் தொற்று நோய் உடலில் தோல் பகுதியைப் பாதித்து நரம்புகளை அழிக்கிறது. இதன் மூலம் கண்களுக்கும் மூக்குக்கும் கூட பிரச்னைகள் உண்டாகலாம். டாக்டர் அர்மர் ஹேன்சன் என்பவர் இந்த நோய்க்குக் காரணமான பாக்டீரியாவைக் கண்டுபிடித்ததால், ஹேன்சன் நோய் என்றும் இதை அழைக்கின்றனர்.

ஆபத்தை உணர்த்தும் அறிகுறிகள்

*இளஞ்சிவப்பு மற்றும் இயல்பான தோலை விட அடர் அல்லது வெளிர் நிற புள்ளிகள் தோலில் ஏற்படுதல். இந்த புள்ளிகள் பாதிக்கப்பட்ட தோலில் உணர்வற்றும் முடியை இழந்தும் கூட காணப்படலாம்.

*கை அல்லது கால் விரல்கள் உணர்விழந்து தசை வாதத்தை உண்டாக்குதல்.
*கண் இமைத்தல் நின்று உலர்ந்துபோதல். சந்திக்க வேண்டிய சவால்கள்
*வியர்வை மற்றும் எண்ணெய்ச் சுரப்பி செயலிழப்பால் கை, கால்களில் உலர்ந்த மற்றும் வெடித்த தோல் உண்டாகிறது.

*தொடுதல் மற்றும் வலி உணர்வு இழப்புகள் கடுமையான காயங்களுக்கு வழிவகுக்கிறது.
*இமை பலவீனம் மற்றும் கண்ணின் ஒளி குறைவு பார்வையிழப்பு ஏற்பட வழிவகுக்கிறது.

*கை, கால்களில் வலுவிழப்பு ஏற்படுகிறது. இதனால் சிறு தசைகளில் வாதம் ஏற்பட்டு கை அல்லது கால் விரல்கள் மடங்கிவிடுகிறது.


எப்படி பரவுகிறது?

தொழுநோயாளி மற்றொருவரைத் தொடுவதன் மூலம் இந்நோய் பரவாது. மோசமான சுகாதார நிலையில் வாழ்பவர்களுக்கே இந்நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக இருமல் மற்றும் தும்மல் மூலம் மைக்கோபாக்டீரியம் லெப்ரே பரவுகிறது. மேலும் பாலியல் தொடர்பு, கர்ப்பம் மூலமாகவும் பரவுகிறது. பெரும்பாலும் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளும் தொழுநோய் பாதிப்புள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு இயல்பான குழந்தைப்பேறும் ஆரோக்கியமான குழந்தைகளும் பிறக்கின்றன.

அதனால் கவலை கொள்ள வேண்டியதில்லை. அதேபோல், இந்நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஊனமும் ஏற்படுவதில்லை. ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் சில தோல் படைகளைத் தவிர வேறு எந்த வெளிப்படையான அறிகுறிகளும் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.

சிகிச்சையால் கட்டுப்படுத்த முடியும்!


உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள Multi-Drug Therapy (MDT) மூலம் தொழுநோய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய் பாதித்த ஆரம்ப நிலையில் இந்த சிகிச்சையை மேற்கொள்வதால் பாக்டீரியாக்கள் விரைவில் கொல்லப்பட்டு நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.தொழுநோய் உலகளவில் பழங்காலம் முதற்கொண்டே இருக்கிறது.

பெரும்பாலும் தொழுநோயாளிகள் சமூகத்தில் இருந்து புறந்தள்ளப்பட்டு ஒதுக்கி வைக்கப்படும் சூழல் அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்ட தொழு நோயாளிகளால் தொடர்ந்து பணிபுரிந்து சமூகத்துக்குச் சேவை ஆற்ற முடியும் என்பதால் அவர்களை பணியிடங்களில் ஒதுக்கி வைப்பதைத் தவிர்க்க வேண்டும். சரியான சிகிச்சையும், சமூக ஆதரவும் இருந்தால் இந்நோயை எதிர்கொண்டு சந்தோஷமான வாழ்வை வாழலாம்.

தொகுப்பு: க.கதிரவன்

Tags : International Leprosy Eradication Day Today
× RELATED அண்ணா நகருக்கு திரும்புகிறது அரசு...