8ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளோ, மாதிரி பொதுத்தேர்வுகளோ நடத்தப்படாது: தொடக்கக்கல்வி இயக்குநரகம் விளக்கம்

சென்னை: நடப்புக் கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும், 5-ம் வகுப்பு பொதுத் தேர்வு 2020, ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 15 அன்று தமிழ், 17 அன்று ஆங்கிலம், ஏப்ரல் 20 அன்று கணக்கு எனத் தேர்வுகள் நடைபெற உள்ளன. 8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு  2020, மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதியுடன் முடிவடைகிறது. மார்ச் 30 அன்று தமிழ், ஏப்ரல் 2 அன்று ஆங்கிலம், ஏப்ரல் 8 அன்று கணக்கு, ஏப்ரல் 15 அன்று அறிவியல், ஏப்ரல் 17 அன்று சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெற  உள்ளன அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், பொதுத்தேர்வு எழுதவுள்ள 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை மாலை வேளைகளில்  ஒரு மணி நேரம் ஒதுக்கி சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 30 மதிப்பெண்களுக்கு முதல் இரண்டு பருவங்களில் மாதிரி வினாத்தாள் தயார் செய்து தினமும் தேர்வுகள் நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு,  கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துடன், சிறிய குழந்தைகளுக்கு மிகப்பெரும் மன அழுத்தம், நெருக்கடி தருவதாக குற்றச்சாட்டியுள்ளனர்.

8ம் வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் மாதிரி பொதுத்தேர்வுகள் நடத்தப்படாது என்று தொடக்கக்கல்வி இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் பழனிசாமி, தற்போது இருக்கும் சூழலில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படக்கூடாது என்பதுதான் பள்ளிக்கல்வித்துறையின் நிலைப்பாடு என்றும், 2019 செப்டம்பரில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து நேற்று தவறுதலாக அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளோ, மாதிரி பொதுத்தேர்வுகளோ நடத்தப்படாது என்று இயக்குநர் பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.

Related Stories: