விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மண்சோறு சாப்பிட்டு நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள்

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் ஜெகமுத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு விருத்தாசலத்தை சுற்றியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சமயபுரத்து மாரியம்மன் பக்தர்கள் ஆண்டுதோறும் மாலை அணிந்து விரதமிருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு யாத்திரை செல்வது வழக்கம். அதன்படி 21வது வருடமாக நடைபெறும் யாத்திரை நிகழ்ச்சிக்கு கடந்த மாதம் 30ம் தேதி மாலை அணிந்து விரதத்தை தொடர்ந்தனர். தொடர்ந்து தினமும் முத்துமாரியம்மன் கோயிலில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

இதனையடுத்து 7ம் நாளான நேற்று விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மண்சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு படைத்த சாதத்தை இலையின்றி தரையில் கொட்டி பின்பு அதை அள்ளி சாப்பிட்டனர். இதில் குழந்தையின்மை, திருமண பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை வேண்டி நேர்த்திக்கடன் செய்தனர். முன்னதாக ஜெக முத்துமாரி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர், மா பொடி, திரவிய பொடி  உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஜெகமுத்துமாரியம்மனை சமயபுரம் யாத்திரை செல்லும் பக்தர்கள் ஜங்ஷன் சாலை, பாலக்கரை, கடை வீதி, தென்கோட்டை வீதி வழியாக விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலிலுக்கு கொண்டு சென்றனர். அதனைத்தொடர்ந்து விருத்தகிரீஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த அம்மனுக்கு படையலிட்டு பம்பை உடுக்கை அடித்து அம்மன் தாலாட்டுப் பாடல் பாடப்பட்டது. அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பரவசமாகி நடனம் ஆடினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெகமுத்துமாரியம்மன் கோயில் பூசாரி பாலு செய்திருந்தார். தொடர்ந்து வருகின்ற 30ம் தேதி பக்தர்கள் இருமுடி கட்டி சமயபுரத்திற்கு ரயில் பயணமாக செல்ல உள்ளனர்.

Related Stories: