60.82 கோடியில் புதியதாக கட்டினால் மீண்டும் கடை கிடைக்காது என்பதால் கோடியில் பணத்தை கொட்டி நேதாஜி மார்க்கெட் கடைகளை முறைகேடாக கைப்பற்றியவர்கள் எதிர்ப்பு

* ஏலம் எடுத்தவர்கள் யாரோ? கடை நடத்துவது யாரோ?

* வேலூர் கலெக்டர் தலையிட்டு தீர்வு காண கோரிக்கை

வேலூர்: வேலூர் நேதாஜி மார்க்கெட் 60.82 கோடியில் புதிதாக கட்டினால் மீண்டும் கடை கிடைக்காது என்று முறையாக ஏலம் எடுத்தவர்களுக்கு கோடியில் பணம் கொட்டி கொடுத்து, கடையை கை மாற்றியவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், இதற்கு தீர்வுகாண வேலூர் கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு வேலூர் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள், பழவகைகள் போன்றவையும், உள்ளூர்களில் இருந்து ஒரு சில காய்கறிகள், கீரைவகைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மார்க்கெட்டில் 750 கடைகளும், 250 தரைக்கடைகளும் உள்ளன. இங்குள்ள கடைகள் மிகவும் பழமை வாய்ந்தது என்பதால் மழைக்காலங்களில் கடைகளுக்கு உள்ளேயே மழைநீர் ஒழுகும் நிலையாக உள்ளது. பெரும்பாலான கடைகள் ஆங்காங்கே இடிந்து விழுந்த வண்ணம் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 5க்கும் மேற்பட்ட கடைகள் இடிந்து மின் விபத்து ஏற்பட்டது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் நேதாஜி மார்க்கெட் உள்ளது. எனவே இடியும் நிலையில் உள்ள நேதாஜி மார்க்கெட்டை அகற்றி புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் தான், வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நேதாஜி மார்க்கெட்டை ₹60.82 கோடியில் நவீன கட்டமைப்புடன் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி மார்க்கெட் கீழ்தளத்தில் 252 கடைகளும், தரைதளத்தில் 224 கடைகளும், முதல் தளத்தில் 269 கடைகளும் என்று மொத்தம் 745 கடைகள் அமைக்கவும், 2வது தளத்தில் வாகன நிறுத்துமிடம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.இதில் நேதாஜி மார்க்கெட்டில் கடை வைத்துள்ள வியாபாரிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்படும் கடைகளுக்கு, தற்போது கடை வைத்துள்ளவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதில் புதிதாக நேதாஜி மார்க்கெட் கட்டினால் மீண்டும் ஏலம் நடத்தி முறையாக கடை ஒதுக்கீடு செய்யப்படும். தற்போது கடை வைத்துள்ளவர்களுக்கு கடை கிடைக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனால் நேதாஜி மார்க்கெட்டில் கடை வைத்துள்ளவர்கள், புதிதாக மார்க்கெட்டி கடைகள் கட்டி ஏலம் நடத்தினால் கடை மீண்டும் நமக்கே கிடைக்காது என்று ₹60.86 கோடியில் புதிதாக கட்ட உள்ள நவீன மார்க்கெட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாம்.

எனவே இதில் வேலூர் கலெக்டர் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நேதாஜி மார்க்கெட் புதிய கட்டிடம் அமைக்க தொல்லியல் துறையிடம் மேல்முறையிடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறு இடத்தில் மார்க்கெட் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நேதாஜி மார்க்கெட்டில் கடை வைத்துள்ள வியாபாரிகள் கூறியதாவது: மாநகராட்சியால் முறையாக ஏலம் நடத்தியவர்கள் தற்போது கடை நடத்தவில்லை. இப்படி நேதாஜி மார்க்கெட்டில் 80சதவீதம் கடைகள் கோடிகளுக்கு கை மாறியுள்ளது. இதற்கு மாநகராட்சி பொறியாளர் ஒருவர் உடந்தையாக இருந்து வருகிறார்.இதனால் தான் மத்திய தொல்லியல் துறை புதிய மார்க்கெட் கட்ட அனுமதி மறுக்கப்பட்டதற்கு சரியான முறையில் மேல்முறையீடு செய்து அனுமதி பெற உரிய ஆவணங்களை திரட்டாமல் மெத்தனமாக இருந்துள்ளார்.

உரிய ஆவணங்கள் தயார் செய்து மேல்முறையீடு செய்திருந்தால் தொல்லியல் துறையின் அனுமதி கிடைத்திருக்கும். ஆனால் கமிஷன் பெற்றுக்கொண்ட பொறியாளர் ஒருவர் மார்க்கெட் கட்ட எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். புதிதாக கடைகள் கட்டும்போது ஒரிஜினலாக பெயரில் உள்ளவர்களுக்கு மட்டும் புதிய கடைகளில் முன்னுரிமை அளிக்கலாம் என்றனர்.

மழைக்காலங்களில் இடிந்து விழும் கடைகள்நேதாஜி மார்க்கெட் மண் ஓடுகளை மேற்கூரையாகக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. மேலும் மார்க்கெட் மிகவும் பழமைவாய்ந்தது என்பதால், மழைக்காலங்களில் கடைகளின் மேற்கூரைகளில் மழைநீர் ஆங்காங்கே ஒழுகும் நிலையாக உள்ளது. அதோடு கடைகளின் சுவர்களிலும் மழைநீர் ஊறி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இடநெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மார்க்கெட், மழைக்காலங்களில் வயல்வெளியில் சேற்றில் கால் வைத்து நடப்பது போல் இருக்கிறது. அதோடு கொசுத்தொல்லையும் அதிகளவில் உள்ளது. இப்படி நேதாஜி மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே புதிய மார்க்கெட் கட்ட உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மாற்று இடத்தில் மார்க்கெட் அமைக்கலாம்

 வேலூர் கோட்டையில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் நேதாஜி மார்க்கெட் வருவதால் ெதால்லியல் துறை புதிதாக கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கவில்லை. எனவே இந்த பணத்தை வேறு எந்த திட்டத்திற்கும் மாற்றவிடாமல், மாநகராட்சி பகுதியிலேயே மாற்று இடத்தில் அதே நிதியைக்கொண்டு புதிய மார்க்கெட் அமைக்கலாம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஸ்மார்ட் சிட்டியே இப்படி இருக்கலாமா?

நேதாஜி மார்க்கெட்டை பொறுத்தவரையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்குள் பொருட்களை வாங்க செல்லும் பொதுமக்களே நெரிசலில் இடிபட்டு தான் உள்ளே சென்று வரவேண்டி உள்ளது.  தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்செல்லும் மிக முக்கியமான மார்க்கெட்டாக  நேதாஜி மார்க்கெட் உள்ளது.

இங்கு திடீர் தீ விபத்துக்கள் ஏற்பட்டால், அவசரகதியில் தீயணைப்பு வாகனங்கள் மார்க்கெட்டிற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. ₹1456 கோடி மதிப்பில் வேலூர் ஸ்மார்ட் சிட்டியாக உருமாறி வரும் நிலையில் இப்படி கந்தலாகி இடிந்து விழும் ஆபத்தான நிலையில் மார்க்கெட்டை வைத்திருக்கலாமா? எனவே இதுபோன்ற பல்வேறு சிக்கல்களை கருத்தில் கொண்டு மார்க்கெட்டை உடனடியாக அகற்றி புதிய மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: