சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள், பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்திய இட்லி, பொங்கல்: டிராலியில் கேட்பாரற்று கிடந்த டிபன் பாக்ஸால் பரபரப்பு

சென்னை: இந்தியாவில் குடியரசு தின கொண்டாட்டம் மற்றும் மங்களூரு விமான நிலையத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு மற்றும் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்  காரணமாக   உச்சக்கட்ட பாதுகாப்பான ரெட் அலர்ட் போடப்பட்டுள்ளது.   இதற்கிடையில், கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையத்தில், கேட்பாரற்று கிடந்த பையில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் சென்னையில் கூடுதலாக வெடிகுண்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இவர்கள், விமான நிலையம் மற்றும் வெளிப்பகுதியில் கேட்பாரற்று கிடக்கும் பொருட்களை தீவிரமாக கண்காணித்து சோதனையிட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை 7.30 மணியளவில் சர்வதேச விமான நிலைய பயணிகள் வருகை பகுதியில், ஒரு டிராலி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதில் ஒரு டிபன் பாக்ஸ் நீண்டநேரமாக கேட்பாரற்று கிடந்தது. பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். உடனே ஒலி பெருக்கியில் அறிவிப்பு ெகாடுக்கப்பட்டது. அதற்கு பிறகும் யாரும் வரவில்லை. வெடிகுண்டாக இருக்குமோ என்ற பீதி ஏற்பட்டது. பிறகு பாதுகாப்பு அதிகாரிகள், அப்பகுதியில் அவசர அவசரமாக பேரிகார்டு   அமைத்தனர். பயணிகளை மாற்று வழியில் அனுப்பினர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் சோதனையிட்டனர். டிபன் பாக்சை திறந்து பார்த்தபோது, இட்லி, பொங்கல் இருந்தது. சந்தேகம் தீராதததால் இட்லி, பொங்கலை சோதனையிட்டனர். எதுவும் இல்லை என்று உறுதியானது. இதையடுத்து, டிபன் பாக்சை விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  ஆனாலும் டிபன் பாக்ஸை வைத்து வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய மர்ம ஆசாமி யார் என்று   சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: