புது படங்கள் வெளிவரும் முதல் நாளிலேயே வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வரிடம் ஜாக்குவார் தங்கம் கோரிக்கை

சென்னை: புது படங்கள் வெளிவரும் முதல் நாளிலேயே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜாக்குவார் தங்கம், நிர்வாகிகள் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது: தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) அமைப்பானது கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் தொடங்கப்பட்ட மிக பழமையான சங்கம். ஒரு வருடத்திற்கு 100 படங்களுக்கு மேல் தணிக்கை சான்றிதழ் வழங்கிக் கொண்டிருக்கிறோம். சிறுபட தயாரிப்பாளர்களுக்கு மானியம் அறிவித்ததற்கு நன்றி.

மேலும் சிறுபட தயாரிப்பாளர்கள் தயாரித்த திரைப்படங்களை வெளியிடுவதற்காக 100 திரையரங்குகளில் திரையிட அரசாங்கம் மூலமாக திரையரங்குகள் கட்டி தந்து உதவ வேண்டும். திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை முதல் நாளிலேயே தமிழ் ராக்கர்ஸ் என்னும் அரக்கன் இணையதளத்தில் வெளியிடுவதை முற்றிலும் அரசு மூலமாக தடுத்து திரைப்பட தயாரிப்பாளர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: