திருச்சியில் பாஜக பிரமுகர் கொலையை கண்டித்து தொண்டர்கள்போராட்டம்

திருச்சி:  திருச்சி பாஜக பிரமுகர் கொலையை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சியின் முக்கிய இடமாக கருதப்படும் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முன்பு பாஜக பிரமுகர் விஜயரகு கொலையை கண்டித்தும், உண்மையான குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் பாஜகவின் தொண்டர்கள் தங்களின் தாமரைக்கொடியுடன் போராட்டம் நடத்திவருகின்றனர். அப்பகுதியானது மிகுந்த வாகனங்கள் செல்லக்கூடிய சாலையாகும். அந்த இருவழி சாலைகளிலும் 100க்கும் மேற்பட்டோர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த மருத்துவமனைக்கு வரக்கூடிய ஆம்புலென்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.  தற்போது அந்த பகுதிக்கு வரும் வாகனங்கள் எம்.ஜி.ஆர் சாலை வழியாக திருப்பி அனுப்பப்படுகிறது. இதனைத்தொடர்ந்து காவலர்கள் 4 தனிப்படை அமைத்து உண்மையான குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காவலர்கள் விசாரணையில் திருச்சி வரகனேரி பென்ஷனர் காலனியை சேர்ந்தவர் விஜயரகு. இவர் பாலக்கரை பகுதி பாஜக மண்டலச் செயலாளராக இருந்துள்ளார். இவரது வீட்டருகே வசித்து வரும் மிட்டாய் பாபு என்பவர், முறைகேடாக லாட்டரி தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து பாஜக பிரமுகர் விஜயரகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததால், இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை காந்தி மார்க்கெட் அருகில் விஜயரகுவை, 5 பேர் கொண்ட கும்பலுடன் மிட்டாய் பாபு அரிவாளால் வெட்டியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயரகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் பாஜகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தொண்டர்கள் பலர் மருத்துவமனை முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர்.

Related Stories: