பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மரப்பேட்டையிலிருந்து ஊத்துக்காடு வரை, பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை பணி துவங்கியது. இதில் வெங்கடேசா காலனி, ஜோதி நகர், கடைவீதி, கரிகால்சோழன் வீதி, ராஜாமில் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் பாதாள சாக்கடை பணி நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் புதிய ரோடு அமைக்கும் பணி அண்மையில் நடைபெற்றது. ஆனால் புதிதாக போடப்பட்ட ரோடு பழுதான நிலையில் இருப்பது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நகராட்சியின் ஒரு பகுதியான, உடுமலை ரோடு மரப்பேட்டையிலிருந்து கந்தசாமி பூங்கா வழியாக ஊத்துக்காடு ரோட்டிற்கு செல்லும் வழியில், சுமார் 3 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணி துவங்கப்பட்டது. இதனால் அந்த பாதையில் வாகன போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.

ஆனால் இந்த பாதையில் பாதாள சாக்கடை பணியை முறையாக மேற்கொள்ளாததால், அப்பகுதியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் உடைத்து, அதிலிருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. மரப்பேட்டையிலிருந்து ஊத்துக்காடு ரோடு வழியாக, கோட்டூர் ரோட்டை  சந்திக்கும் வழியில் பாதாள சாக்கடைக்கு என அமைக்கப்பட்ட ஆளிறங்கும் குழியில் தண்ணீர் தேக்குவதால், மோட்டார் மூலம் தண்ணீரை வெளியே எடுக்க வேண்டியதாக உள்ளது. இந்த பாதையில் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்காததால், அந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் மாற்றபாதையில் செல்வதால், உடுமலை ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.  எனவே, உடுமலை ரோடு மரப்பேட்டையிலிருந்து கோட்டூர் ரோடு செல்லும் வழியில் நடக்கும் பாதாள சாக்கடை பணியை தரத்துடன் அமைப்பதுடன், அந்த பணியை விரைந்து முடித்து வாகனங்கள் செல்ல நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: