மாநகராட்சி 5வது மண்டலத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத பூங்கா; பொதுமக்கள் அவதி

தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி 5வது மண்டலத்துக்கு உட்பட்ட ராயபுரத்தில் அண்ணா பூங்கா உள்ளது. வடசென்னையில் பெரிய பூங்காவாக விளங்கும் இங்கு நாள்தோறும் 500க்கும் மேற்பட்டோர் காலை, மாலை  வேளைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். மேலும், யோகா பயிற்சி, இறகு பந்து விளையாடுதல் உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர். ஆனால், இந்த பூங்காவில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி இல்லை. இதனால் இங்கு நடைபயிற்சிக்கு வரும் முதியோர்கள், பெண்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். நடைபயிற்சி செய்பவர்கள் திடீரென தாகம் எடுத்தால் தண்ணீர் இல்லாமல்  அவதிப்படுகின்றனர். பெண்கள், முதியோர் அவசரத்திற்கு கழிப்பறை செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த பூங்காவில் நடைபாதை சேதமடைந்துள்ளது.

ஆங்காங்கே முட்புதர் மண்டி கிடக்கிறது. பூங்காவின் சுற்றுச்சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள் கூட செடிகள் வளர்ந்து மறைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி இந்த பூங்காவை மாநகராட்சி அதிகாரிகள் சீரமைத்து குடிநீர் வசதி, கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். மேலும், பூங்காவில் பழுதடைந்துள்ள தரையை சரிசெய்ய வேண்டும், புதர்களை அகற்ற வேண்டும்,  என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: