தமிழக மாணவர்களை குறி வைத்து சாக்லேட், மாத்திரை வடிவில் போதை பொருள் சப்ளை: தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் தகவல்

சென்னை: தமிழகத்தில் மாணவர்களை குறி வைத்து போதை பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாகவும், இது தொடர்பாக பெற்றோர், ஆசிரியர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் கூறியுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், அதன் தொடர்புடைய துறை ரீதியான ஆய்வு கூட்டங்கள் மாவட்ட வாரியாக நடத்துவது தொடர்பாக விரிவாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஒரு கும்பல் மாணவர்கள், குழந்தைகளை குறித்து போதை பொருட்களை சப்ளை செய்து வருகிறது. அதாவது யாருக்கும் சந்தேகம் வராத வகையில் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. சாப்பிட பயன்படுத்தப்படும் சாக்லேட் மற்றும் மாத்திரை வடிவில் இதனை அரங்கேற்றி வருகிறது. இது தொடர்பாக தேசிய குழந்தைகள் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக இந்தியா முழுவதும் 350 புகார்கள் இதுவரை பெறப்பட்டுள்ளது. இதில் 150 புகார்கள் தமிழகத்தில் இருந்து வந்துள்ளது. இந்த புகார்கள் மீது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. போதை பொருட்கள் விஷயத்தில் பெற்றோர், ஆசிரியர்கள் விழிப்புணர்வுடன் இருந்து மாணவர்கள், குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். போதை பொருட்கள் விவகாரம் தொடர்பாக தமிழக போலீஸ் டிஜிபியை திரிபாதியை சந்தித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக அவர் தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: