பொதுப்பணித்துறையில் பணிவரன்முறை செய்யப்பட்ட 3047 தினக்கூலி ஊழியர்களுக்கு சம்பளம் திடீர் நிறுத்தம்: குடும்பம் நடத்த முடியாமல் தவிப்பு

சென்னை: பொதுப்பணித்துறையில் பணிவரன்முறை செய்யப்பட்ட 3047 தினக்கூலி ஊழியர்களுக்கு  டிசம்பர் மாதம் ஊதியம் வராததால், அந்த ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழக பொதுப்பணித்துறையில் பாசன உதவியாளர், அலுவலக உதவியாளர், டிரைவர், துப்புரவாளர், காவலர் என பல்வேறு நிலைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் அதாவது மாதம் 7 ஆயிரம் வரை மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், திண்டுக்கலை் சேர்ந்த ராஜா செல்வன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கின் பேரில், பொதுப்பணித்துறையில் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அதே பணியை செய்யும் நிரந்தர ஊழியர்களை போல் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

ஊதிய வரைமுறை குறித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.இதை தொடர்ந்து, பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் தினக்கூலி ஊழியர்கள் தொடர்பான பட்டியலை ஸ்கிரீனிங் கமிட்டி ஆய்வு செய்து அரசுக்கு அனுப்பி வைத்தது. அதன்படி, கடந்த மாதம் 3407 தினக்கூலி ஊழியர்களை புதிய ஊதியம் வரன்முறை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் வங்கி கணக்கில் புதிய ஊதியம் வழங்கப்படும் என்றும், இந்த ஊதியம் குறைந்த பட்சம் ₹18,500 ஊதியம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால், அந்த ஊழியர்களுக்கு 21 நாட்களாகியும் ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு ஊழியர்கள் விவரங்களை அந்தெந்த கோட்டங்கள் சார்பில் கருவூலத்துறைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என தெரிகிறது.இதனால், 25 நாட்களாகியும் ஊதியம் வராதததால் ஊழியர்கள் தங்களது குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை ஓட்டி இந்த ஊழியர்களுக்கு போனஸ் கூட இல்லாத நிலையில் கடன் வாங்கி பண்டிகையை கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டதாக தினக்கூலி ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.மேலும், அவர்கள் டிசம்பர் மாதம் ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: