இன்று 71வது குடியரசு தினம்: கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: 71வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித்: இந்திய அரசியலமைப்பு உருவாவதற்கு உன்னதப் பங்களிப்பு செய்த விடுதலைப் போராட்ட வீரர்கள், சட்டமியற்றிய மேதைகள் யாவரையும் நன்றியுடன் இத்தருணத்தில் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம்.  இந்திய அரசியல் அமைப்பின் உன்னதக் குறிக்கோளைப் பாதுகாத்திடும் வகையில் நம் வாழ்வின் மூச்சு, செயல் ஆகியவற்றை அர்ப்பணித்து, தேசத்தின் பெருமையைக் கட்டிக்காப்பதில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல முன்வருவோமாக என  வாழ்த்துகின்றேன்.

கே.எஸ்.அழகிரி(தமிழக காங்கிரஸ் தலைவர்): 71வது இந்திய குடியரசு தினத்தில், அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள நோக்கங்களை பாதுகாக்கிற வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ஒவ்வொரு குடிமகனும்  இந்நாளில் சூளுரை ஏற்க வேண்டும். இத்தகைய சூளுரையின் மூலமே 130 கோடி மக்களுடைய நலனையும், உரிமைகளையும் பாதுகாக்க முடியும் என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது. அனைத்து மக்களும் இந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்க  வேண்டும். அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): சாதி, மத, இன, மொழி ஆகிய பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்ற உணர்வோடு செயல்பட்டு இந்திய நாட்டில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும்,  பாதுகாப்புக்கும் துணைநிற்போம். ஒன்றுபடுவோம், செயல்படுவோம், இந்திய நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பை பாதுகாப்போம்.

சரத்குமார்(சமக தலைவர்): உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் இந்திய நாட்டில் ஜாதி, மதம், மொழி, இனம் என பல வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொண்டு நம் தேசத்  தலைவர்களையும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட நம் முன்னோர்களையும் நினைவு கூறுவோம். அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்.

டி.டி.வி.தினகரன்(அமமுக பொது செயலாளர்): ஜனநாயகத்திற்கு தீங்கு எதுவும் நேராமல் போற்றிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியரின் கடமை. யாரையும் காயப்படுத்தாமல், எல்லோருடைய உரிமைகளையும் சுதந்திரத்தையும் பேணி  பாதுகாத்து ஒற்றுமையோடு வாழ்வதற்கான உறுதியை இந்த நல்ல நாளில் அனைவரும் எடுத்துக் கொள்வோம்.

எம்.எச்.ஜவாஹிருல்லா(மமக  தலைவர்): குடியரசு தினத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவாகவும்,  தேசத்தந்தை காந்தியடிகளின் உணர்வாகவும் திகழும் நமது நாட்டின் அரசமைப்புச்  சட்டத்தின்  அடிப்படைகளைப் பாதுகாக்கவும்  வேற்றுமையில் ஒற்றுமை காணும் அதன்  அடிநாதத்தை நிலைநாட்டவும் உறுதி எடுத்துக்கொள்வோமாக.

வி.எம்.எஸ்.முஸ்தபா(தழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர்): தேசவளம், தொழில்நுட்பத்தை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவோம். மதம், ஜாதி, இனம், மொழி, கலாசாரம் என பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியர் என்ற ஒரே சொல்லில்  நாம் அனைவரும் பிணைக்கப்பட்டுள்ளோம். இதற்கு குந்தகம் விளைவிப்போரை வீழ்த்தி புதிய இந்தியா படைக்க குடியரசு நாளில் உறுதியேற்போம்.

இதே போல் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன்,  கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் உள்ளிட்ட தலைவர்களும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Related Stories: