டாஸ்மாக் தேர்வில் தேர்வான இளநிலை உதவியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

சென்னை: டாஸ்மாக் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற இளநிலை உதவியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தில் காலியாக இருந்த 500 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தது. மதுரை, திருச்சி, சேலம், கோவை, சென்னை ஆகிய 5 மண்டலங்களில் நடந்த தேர்வை 8,401 பேர்  எழுதினர். இதையடுத்து தேர்வு முடிவுகள் ஜூலை 3ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், இளநிலை உதவியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதன் அடையாளமாக முதல் 7 பேருக்கு கடந்த 6ம் தேதி பணி நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.  தொடர்ந்து மீதம் உள்ளவர்கள் தங்களின் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் பணிநியமன ஆணையை பெற்றுக்கொண்டனர்.

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம், மதுரை மண்டலத்தில் 24, 25ம் தேதி பயிற்சி வகுப்புகள் நடந்து முடிந்துள்ளது. இதை தொடர்ந்து, வரும் 28, 29ம்  தேதிகளில் திருச்சி, சென்னையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. ஜன.31 மற்றும் பிப்ரவரி 1ம் தேதி கோவை மண்டலத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. காலை 9.45 மணிக்கு தொடங்கும் பயிற்சி வகுப்புகள் மாலை 5.30 மணி  வரை 4 பிரிவுகளாக நடைபெறும். மேலும், முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், நிதி பிரிவு பொதுமேலாளர், ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயிற்சி அளிக்கின்றனர்.

Related Stories: