70 லட்சம் கடனை திருப்பி தராததால் ஒப்பந்ததாரரை கடத்தியவர் காவல் நிலையத்தில் சரண்

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (47). இவர், தமிழக பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரராக உள்ளார். இவர், கடந்த 2ம் தேதி காலை அதே பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, காரில் வந்த 4 பேர் கும்பல், திடீரென ரவிச்சந்திரனை சரமாரியாக தாக்கி காரில் கடத்தி சென்றனர்.  இதனால், ரவிச்சந்திரன் அலறி கூச்சலிட்டார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு மூலம், சம்பந்தப்பட்ட கார் எங்கு செல்கிறது என்பதை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த கார் திருமங்கலத்தில் நின்றிருப்பதை அறிந்ததும், அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு காருக்குள் இருந்த ஒப்பந்ததாரர் ரவிச்சந்திரனை மீட்டனர். தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட தினேஷ் என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரிடம் 70 லட்சத்தை ஒப்பந்ததாரர் ரவிச்சந்திரன் கடனாக வாங்கியுள்ளார். அதன்பிறகு அப்பணத்தை திருப்பி தராமல் அலைக்கழித்து வந்துள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார், தனது நண்பர்களான ஜோதிகுமார், தினேஷ், புருஷோத்தமன் ஆகிய 3 பேருடன் சேர்ந்து, ஒப்பந்ததாரர் ரவிச்சந்திரனை காரில் கடத்தி சென்றது தெரியவந்தது.  இதைத் தொடர்ந்து, கடந்த 3ம் தேதி ஜோதிகுமார், புருஷோத்தமன் ஆகிய இருவரும் போலீசில் சரணடைந்தனர். இவ்வழக்கில் தலைமறைவான ஜெயக்குமாரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அண்ணாநகர் போலீசில் அவர் சரணடைந்தார்.

Related Stories: