அப்போலோ மருத்துவமனையில் அதிநவீன தண்டுவட அறுவை சிகிச்சை மையம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் அதிநவீன தண்டுவட அறுவை சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போலோ மருத்துவமனையில் அதிநவீன தண்டுவட அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 7.5 கோடி மதிப்பில் தண்டுவட அறுவை சிகிச்சை ரோபோ வாங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. அப்போலோ மருத்துவ குழும தலைவர் பிரதாப் சி.ரெட்டி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ரோபோட் செயல்பாட்டை தொடங்கி வைத்தனர்.  நிகழ்ச்சியில் அப்போலோ மருத்துவ குழும துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி, பல்வேறு நாடுகளிலிருந்து 40க்கும் அதிகமான தண்டுவட அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:

 தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளில் முக்கியமான மருத்துவமனையாக அப்போலோ மருத்துவமனை திகழ்கிறது. சுகாதாரத்துறையில் தமிழகம், நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக மட்டுமல்லாமல், முன்மாதிரி மாநிலமாக உள்ளது. சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் அதிநவீன ரோபோட்டிக் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் இருந்து நோயாளிக்கு சிக்கலான முதுகெலும்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  தமிழகத்தை பொறுத்தவரை அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் சுகாதாரத்துறையில் சிறந்து விளங்குகிறது.

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் உலகத்தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சைபெற்று நலமுடன் தங்கள் நாடு திரும்புகின்றனர். முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் தமிழகத்தை சேர்ந்த பல ஏழைகளுக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அதிநவீன ரோபோவுடன் கூடிய தண்டுவட சிகிச்சை மையம் செயல்படும் என்று அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related Stories: