தெள்ளார் அரசு பள்ளியில் ஆன்லைன் மூலம் கணிதம் கற்கும் மாணவர்கள்

வந்தவாசி: தெள்ளார் ஒன்றிய அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கணிதம் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினியில் ஆன்லைன் மூலம் கணிதம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அரசின் அனுமதியோடு தனியார் தொண்டு  நிறுவனங்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்காக அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு கணினி இயக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர் கணினியில் ஆன்லைனில் கணிதப் பாடம் பயிற்றுவிக்கப்படும்.

அதன்படி ஊராட்சி ஒன்றிய நடுநிலை, தொடக்கப்பள்ளிகளில் மாடல் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, அங்கு மடிக்கணினி மூலம் ஆன்லைன் இணைப்பு ஏற்படுத்தப்படும். பின்னர் கணிதத்திற்கான சாப்ட்வேர்  இணைக்கப்படும். மாணவர்கள்  மடிக்கணினியை இயக்கும்போது ெஹட்செட்டை காதில் அணிந்துகொண்டு கணிதம் கற்று கொள்வர். அப்போது ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் உடனே அருகே உள்ள பயிற்று ஆசிரியரிடம் கேட்டு விளக்கம் பெறலாம்.

அதன்படி வந்தவாசி அடுத்த தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஜப்திகாரணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு மாணவர்களில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம்  மடிக்கணினி வழங்கப்பட்டது.

இதன் மூலம் வரும் 26ம் தேதி முதல் மாணவர்கள் ஆன்லைனில் கணிதம் கற்றுக்கொள்ள உள்ளனர். இந்த திட்டம் ஏற்கனவே அனக்காவூர் ஒன்றியம் கீழ்சாத்தமங்கலம் நடுநிலைப்பள்ளி, ஆரணி ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தெள்ளார் ஒன்றியத்தில் 3வது பள்ளியாக  ஜப்திகாரணி நடுநிலைப்பள்ளியில் முதல் முறையாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: