மார்த்தாண்டம் அரசு பள்ளியில் மரத்தடிகளை சுமக்கும் மாணவர்கள்: பெற்றோர்கள் கவலை

மார்த்தாண்டம்: தேசிய நெடுஞ்சாலையையொட்டி மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பல ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பள்ளி பழமையான கட்டிடங்களுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த கட்டிடங்கள் பராமரிப்பின்றி பரிதாபமாக  காணப்படுகின்றன.இந்த பள்ளி வளாகத்திலேயே திருவட்டார் கல்வி மாவட்ட அலுவலகம் உள்ளது. மேலும் அருகில் குழித்துறை கல்வி மாவட்ட அலுவலகமும் உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து  வருகின்றனர். பள்ளி வளாகத்தில் பல மரங்கள் உள்ளன.

இந்த நிலையில் ஓகி புயலின்போது பள்ளி வளாகத்தில் நின்ற சில மரங்கள் வேரோடு சாயந்தன. அவை அகற்றப்படாமல் அப்படியே கிடந்தன. இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களை  வைத்து இந்த மரங்களை அகற்றி பின்பகுதியில் ஓரமாக போட வைத்துள்ளனர்.தற்போது தேர்வு நெருங்கும் வேளையில் மாணவர்களுக்கு பாடம் சொல்லி தராமல் இதுபோன்ற செயல்களை செய்வது சரிதானா என பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் பெரிய தடிகளை எடுத்து செல்லும்போது தவறி விழுந்தால்  மாணவர்களின் நிலை என்னாவது என்ற கேள்வியும் எழுகிறது.எனவே ஆபத்தான இதுபோன்ற செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: