எழுமலை அருகே 2 கன்றுக்குட்டிகளை கொன்ற சிறுத்தை?

உசிலம்பட்டி: எழுமலை அருகே கன்றுகுட்டிகளை சிறுத்தை கடித்து கொன்றதாக தகவல் பரவி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், எழுமலை, அண்ணா தெருவை சேர்ந்தவர் சேகர்(52). இவருக்கு சொந்தமாக எழுமலை அருகே வாசிமலையான் கோயிலுக்கு செல்லும் மொட்டனூத்து சாலையில் தோட்டம் உள்ளது. இங்கு பால் கறவை மாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் பராமரித்து வருகிறார். நேற்று அதிகாலை பால் கறக்க சென்ற போது, 2 கன்றுக்குட்டிகள் கொடூரமாக கடிக்கப்பட்டு இறந்து கிடந்தன. மற்றொன்று படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சேகர், காயமடைந்த கன்றுக்குட்டியை மீட்டு கால்நடை மருத்துவனைக்கு ெகாண்டு சென்றார். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இதேபோல் இந்த தோட்டத்திற்கு அருகில் கடந்த ஜன.21ம் தேதி பிச்சைப்பாண்டி என்பவரது கன்றுக்குட்டியும் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தது. இவற்றை சிறுத்தை கடித்துக் கொன்றதாக தகவல் பரவி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். விவசாயி சேகர் கூறுகையில், ‘‘இங்குள்ள தீவனங்களை அறுத்துதான் கால்நடைகளுக்கு போடுவோம். இப்போது சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் புல் அறுக்க செல்லக்கூட பயமாக இருக்கிறது. வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும்’’ என்றார்.

உசிலம்பட்டி வனச்சரக அலுவலர் அன்பழகன் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் கண்டிப்பாக சிறுத்தை நடமாட்டம் கிடையாது. கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு என்ன விலங்கு, கன்றுகளை கடித்தது என தெரிந்துவிடும். இரவுநேரங்களில் தோட்டங்களில் யாரும் தங்க வேண்டாம்’’ என தெரிவித்தார்.

Related Stories: