காஷ்மீர் பிரச்சனையில் 3-வது நாட்டின் சமரசத்துக்கு இடமில்லை: சிம்லா உடன்பாடு, லாகூர் ஒப்பந்தப்படி தான் தீர்வு காண வேண்டும்... ரவீஷ் குமார் பேட்டி

டெல்லி: காஷ்மீர் பிரச்சனையில் 3-வது நாட்டின் சமரசத்துக்கு இடமில்லை என வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. மேலும், காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்ப்டடது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உலக நாடுகளின் ஆதரவை நாடியது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலிலும் காஷ்மீர் பிரச்சனையை சீனாவின் உதவியுடன் பலமுறை பாகிஸ்தான் எழுப்ப முயன்றது, ஆனால்  எந்த நாட்டின் ஆதரவும் பாகிஸ்தானுக்கு கிடைக்கவில்லை.

காஷ்மீர் விவகாரம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு விஷயம் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் மற்ற நாடுகள் கூறியதால் பாகிஸ்தானின் முயற்சிகள் தோல்வியடைந்தது. காஷ்மீர் பிரச்சினையில் உதவ அமெரிக்கா தயாராக உள்ளதாகவும், இரு நாட்டு தலைவர்களும் விரும்பினால் தான் மத்தியஸ்தராக இருந்து பிரச்னையை தீர்க்க தயாராக உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார். ஏற்கனவே டிரம்ப்பின் சமரச முயற்சியை இந்தியா பல முறை நிராகரித்த போதும் மீண்டும் டிரம்ப் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து போது அதிபர் டிரம்பில் கருத்துக்கு பதில் அளித்தார்.

அப்போது பேசிய அவர்; காஷ்மீர் பிரச்சனையில் 3-வது நாட்டின் சமரசத்துக்கு இடமில்லை இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இருதரப்புப் பிரச்சனையை இரு நாடுகளும் தான் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். சிம்லா உடன்பாடு மற்றும் லாகூர் ஒப்பந்தப்படி தான் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டியது பாகிஸ்தானே எனவும் கூறியுள்ளார். சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகளிடம் கரோனா வைரஸ் உள்ளதா என பரிசோதனை செய்யப்படும். பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை நடத்த விமான நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு 4-வது முறையாக காஷ்மீர் விஷயத்தில் டிரம்பின் விருப்பம் மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: