மெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கி இருப்பதாக தகவல்: கைது செய்ய சர்வதேச போலீசார் தீவிரம்

பெங்களூர்: மெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அவரை கைது செய்வதில் சர்வதேச போலீசார் தீவிரமாக  ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவின் உள்ள பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ஆசிரமங்களை நடத்தி வரும் சாமியார் நித்யானந்தா மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. குஜராத்தில் உள்ள ஆசிரமத்தில் தனது மகள்களை கடத்தி சிறை வைத்துள்ளதாக பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் நித்யானந்தா மீது அகமதாபாத் போலீசார் கடத்தல் வழக்கை பதிவு செய்தனர்.

நித்யானந்தா மீது அடுத்தடுத்து  வழக்குகள் பாய்ந்ததால் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இதனையடுத்து சர்வதேச போலீஸ் உதவியுடன் நித்யானந்தாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கடந்த டிசம்பர் மாதம் போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சி.பி.ஐ. மூலம் சர்வதேச போலீசை குஜராத் போலீசார் அணுகி நித்யானந்தாவை கண்டுபிடிக்க உதவுமாறு வேண்டுகோள் வைத்தனர். இதன் அடிப்படையில் நித்யானந்தாவுக்கு எதிராக சர்வதேச போலீசார் ‘புளூ கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

குற்ற வழக்கில் தேடப்படும் ஒருவரின் அடையாளம், இருப்பிடம், செயல்பாடுகள் ஆகியவை குறித்து தகவல் தெரிந்தால் சம்பந்தப்பட்ட நாடுகள் சர்வதேச போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே ‘புளூ கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. இதன் மூலம் சர்வதேச போலீசாரின் அதிகாரத்துக்குட்பட்ட 150 நாடுகளில் நித்யானந்தா எங்கு பதுங்கி இருக்கிறார் என்ற விபரம் விரைவில் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

தற்போது நித்யானந்தா  மெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  நித்யானந்தா புதிய பாஸ்போட்டை பயன்படுத்தி எங்கும் பயணம் செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என கூறிய போலீஸ் அதிகாரிகள் அவருக்கு எதிராக ‘புளூ கார்னர்‘ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவரது அனைத்து நகர்வுகளும் முழுமையாக கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: