ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் பல்துறை தகவல்கள் மூலம் 10 பணிகள் ஒருங்கிணைப்பு: ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் மூலம் 10 பணிகள் ஒருங்கிணைக்கப்படவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. கேரள அரசு நிறுவனமான கேரளா ஸ்டேட் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை ஆணையர்கள் குமாரவேல் பாண்டியன், மதுசுதன் ரெட்டி, கிரேஸ் லால்ரின்டிகி பச்சுவாவ், வட்டார துணை ஆணையர்கள் பி.என்.ஸ்ரீதர், பி.ஆகாஷ், தலைமை பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை மாநகரின் நிலையான, ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான மாற்றங்களை மக்கள் பங்களிப்போடும், அனைத்துத் துறையின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் நிறைவேற்றுவதே மையத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டமானது மற்ற வெவ்வேறு துறைகளின் விவரங்களை சேகரித்து, ஒருங்கிணைத்து, நடைமுறை ஆய்வு செய்து, மிக அதிக அளவு விவரங்களை கையாளும் முக்கியப்பணியைச் செய்யும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், திறன்மிகு தகவல் மையம் - பெரிய அளவிலான கணினி, மழையளவு, சுற்றுச்சூழல் தன்மை, வெள்ள முன்னேற்ப்பாடு கண்காணிக்கும் சென்சார், தகவல் மற்றும் செய்தி அறிவிப்பு பலகை, கண்காணிப்பு அமைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை அமைப்பு, தகவல் கம்பம், திடகழிவு மேலாண்மை ஒருங்கிணைப்பு, வாகன நிறுத்த மேலாண்மை ஒருங்கிணைப்பு மற்றும் கண்ணாடி இழை வலை பின்னல் போன்ற பத்து பணிகள் இதன் மூலம் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.

மேலும், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய பயன்பாட்டு உதவியுடன் தொழில் நுட்ப இணையம், மின்சாரம், புவியியல், தகவல்அமைப்பு, திறன்மிகு போக்குவரத்து அமைப்பு, மற்றும் கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் அமைப்புகள் ஒருங்கிணைக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: